என் லைப்ரரியில் இருந்த 20 சதவிகித புத்தகங்கள் எரிந்து போனதுதான் தாங்க முடியாததாக இருக்கிறது என நடிகர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்தார்.
நடிகர் கமல்ஹாசனின் வீட்டில் கடந்த 8-ம் தேதி திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அவரது நூலகத்தில் இருந்த புத்தகங்கள் எரிந்து போனதாகக் கூறப்பட்டது. இதில் 20 சதவிகித புத்தகங்கள் எரிந்துவிட்டதாக கமல்ஹாசன் இப்போது கூறியுள்ளார். அவர் கூறும்போது, ‘பொருளாதார பாதிப்புகளை தாங்கிக்கொள்ளலாம். 20 சதவிகித புத்தகங்கள் எரிந்து போனதுதான் தாங்க முடியாததாக இருக்கிறது. இதில் பல புத்தகங்கள், சம்மந்தப்பட்ட எழுத்தாளர்கள் கையெழுத்திட்டுக் கொடுத்தவை. இதில் சில எழுத்தாளர்கள் இப்போது உயிரோடு இல்லை. இழந்து போன அவற்றை எந்த பணமும் திருப்பி தந்துவிடாது’ என்றார்.
அவர் மேலும் கூறும்போது, ‘எனது புதிய வீடு இன்னும் ஆறு அல்லது ஏழு மாதங்களில் தயாராகிவிடும். அதன் அருகில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கான ஸ்டூடியோவும் கட்டியிருக்கிறேன். இப்போதைய எனது அலுவலகத்துக்கு செல்ல, வருடத்துக்கு 600 மணி நேரத்தை செலவழிக்கிறேன். அது ரெடியாகிவிட்டால் அந்த நேரம் மிச்சமாகும்’ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.