[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சர்ச்சைக்குரிய ஓவர் த்ரோ ரன்கள் - மவுனம் கலைத்தது ஐசிசி
  • BREAKING-NEWS என்.எல்.சி ஊழியரை அடித்துக் கொன்ற மனைவி - விசாரணையில் அம்பலம்
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்
  • BREAKING-NEWS ‘சரவணபவன்’ ராஜகோபால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS நடு ரோட்டில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக் கொலை - தகாத உறவு காரணமா?

வாழ்கையின் வலி மிகுந்த பகுதிகளை கடக்க உதவிய கமல்ஹாசனுக்கு நன்றி.. கவுதமி உருக்கம்

heartbroken-to-have-to-share-life-and-decisions-says-gautami

நடிகர் கமல்ஹாசனை பிரிந்து விட்டதாக நடிகை கவுதமி அறிவித்துள்ளார். தனது மகளின் எதிர்காலம் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ” கடந்த 13 ஆண்டுகளாக நடிகர் கமல்ஹாசனோடு மனநிறைவோடு வாழ்ந்து வந்த நான் கனத்த மனதுடன் இந்த முடிவை அறிவிக்கிறேன். எனது மகளின் எதிர்காலம் கருதி கமல்ஹாசனை விட்டு பிரிகிறேன். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக இதுகுறித்து யோசித்து வந்த நான் தனிப்பட்ட சில காரணங்களுக்காக தற்போது இந்த முடிவை எடுத்துள்ளேன்.

இதன் மூலம் நான் யாரையும் குறை சொல்லவோ, அனுதாபம் தேடவோ நினைக்கவில்லை. இந்த பிரிவு தவிர்க்க முடியாதது. மனித வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் வெவ்வேறு விதமான சூழ்நிலைகள், சந்தர்ப்பங்களைக் கடந்தே வருகிறோம். இத்தகைய மாற்றங்கள் எப்பொழுதும் நமது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக அமைவதில்லை. உறவுகளின் பரிமாணங்கள் ஒரே பிம்பத்தை தொடர்ந்து பிரதிபலிப்பது இல்லை. எந்த ஒரு பெண்ணும் இதுபோன்றதொரு கடுமையான சூழல்களை கடந்தே பயணிக்க வேண்டியிருக்கிறது. இந்த பிரிவு  எனக்கான தற்போதைய தேவை என்றே நினைக்கிறேன். முதலாவதாக நான் ஒரு தாய். என்னால் இயன்றவரை எனது மகளுக்கு சிறந்த தாயாக இருக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. அந்த பொறுப்பை சிறப்பாக செய்ய வேண்டுமானால் எவ்வித குழப்பமோ, பதற்றமோ இல்லாத மனநிலை அவசியம். இப்போது எனக்கு மன அமைதி தேவை என்று நினைக்கிறேன்.

தமிழ் திரையுலகிற்கு வருவதற்கு முன்பிலிருந்தே ஒரு ரசிகையாக கமல்ஹாசனின் திறமைகளைக் கண்டு வியந்திருக்கிறேன். அவர் வாழ்க்கையின் பல்வேறு கடினமான தருணங்களில் நான் உடன் இருந்து இருக்கிறேன். அதில் மனதை விட்டு அகலாத நினைவுகள் பல உண்டு. 20 ஆண்டு கால நட்பில் கமல்ஹாசனிடம் நிறையக் கற்றுக்கொண்டேன். ஒரு ரசிகையாக கமல்ஹாசனை தொடர்ந்து ரசித்துக்கொண்டே இருப்பேன்.

எதிர்காலத்தில் கமல்ஹாசன் மேலும் பல சாதனைகளை படைப்பார். கடந்த 29 ஆண்டுகளாக அவரது அன்பும், ஆதரவும் கிடைக்கப்பெற்றதற்கு நன்றி. எனது வாழ்க்கையின் இருண்ட, வலி மிகுந்த பகுதிகளை கடக்க கமல்ஹாசன் உதவியாக இருந்தமைக்கு எனது பணிவான நன்றியை உரித்தாக்குகிறேன் “- இவ்வாறு அந்த பதிவில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இருவரும் பிரிவது குறித்து விவாதித்துதான் முடிவெடுத்தோம் என்று நடிகை கவுதமி புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close