|
அக்னிப்பரீட்சை
மாலன் ஐந்து மாநிலங்களில் நடைபெற்று வரும் தேர்தல்கள் அரசியல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவை. ராகுல் காந்தியின் எதிர்காலத்தைத்தீர்மானிக்கும் வல்லமை கொண்டவை யானை வரும் முன் வரும் மணியோசை, திருப்பு முனை, முடிவின் ஆரம்பம், புதியதோர் துவக்கம் என்று உங்கள் நிலையைச் சார்ந்து எப்படி வேண்டுமானாலும் வர்ணிக்கலாம். ஆனால், எப்படிச் சொன்னாலும் மறுக்க முடியாத ஓர் உண்மை, ஜனவரி 28ம் தேதி துவங்கி நடந்து கொண்டிருக்கும் ஐந்து மாநிலத் தேர்தல்கள், மத்தியில் ஆட்சியில் இருக்கும் ஐக்கிய முன்னணி அரசுக்கு ஓர் அக்னிப் பரீட்சை. ஒரு வகையில் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போவதும் இந்தத் தேர்தல்கள்தான். ஏனெனில், இந்தத் தேர்தல்கள்தான்
- அரசியலில் ராகுல் காந்தியின் எதிர்காலம் என்ன?
- ஐக்கிய முன்னணி அரசு ஆட்சியில் நீடிக்குமா?
- அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா அல்லது அது ஊடகங்களின் கற்பனைச் சித்திரமா?
- தேசிய அரசியல் என்பது முடிந்துவிட்டதா, நாட்டின் எதிர்காலம் மாநிலக்கட்சிகளின் கையில்தான் இருக்குமா?
என்ற முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளைத் தீர்மானிக்கவிருக்கிறது.
மணிப்பூர் (ஜனவரி 28), பஞ்சாப் (ஜன30), உத்தரகண்ட் (ஜன 30), உத்தரப்பிரதேசம் (பிப் 4 முதல் பிப் 28 வரை), கோவா (மார்ச் 3) என ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத்திற்குத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த ஐந்தில் மூன்று மாநிலங்களிலாவது ஆட்சியைப் பிடித்து உத்தரப்பிரதேசத்திலும் கணிசமான இடங்களைப் பெற்றால்தான் காங்கிரஸ் தனது எதிர்காலம் பற்றி நம்பிக்கை கொள்ள முடியும்.
மணிப்பூர்
தொடர்ந்து இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் வென்று, இங்கு காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. மூன்றாவது முறையும் வென்றால், அது ஒரு சாதனையாக அமையும். ஆனால், இம்முறை அது சந்திக்கும் சவால்கள் பல. அவற்றுள் முக்கியமானது தலைமறைவாக இருக்கும் ஏழு இடதுசாரி புரட்சிகர இயக்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு காங்கிரசைப் புறக்கணிக்கச் சொல்லி மக்களை மிரட்டி வருவதுதான். பல காங்கிரஸ் வேட்பாளர்களின் வீடுகளை அது முற்றுகையிட்டிருப்பதால் அவர்கள் பிரச்சாரத்திற்கு வெளியே வர இயலாத நிலை ஏற்பட்டிருக்கிறது. பிரச்சாரத்திற்குப் போகக் கூடாது, மீறினால் மரண தண்டனை எனக் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கும் ‘ஓலை’ அனுப்பியிருப்பதால் அவர்கள் முடங்கிக் கிடக்கிறார்கள்.
மற்றொரு சவால், அண்டை மாநிலமான நாகாலாந்தில் செல்வாக்கோடு திகழும் நாகா மக்கள் முன்னணி தனது வேட்பாளர்களை முதல் முறையாகக் களம் இறக்கியிருப்பது.
மணிப்பூர் சட்டமன்றத்தில் உள்ள இடங்கள் 60. ஆட்சியைப் பிடிக்க 31 இடங்கள் வேண்டும். இதில் 10 இடங்களில் நாகா மக்கள் முன்னணி தனது வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் தன் வசம் உள்ள எம்.எல்.ஏ.க்கள் முக்கியத்துவம் பெறுவார்கள் என்பது அதன் கணக்கு.
காங்கிரசை எதிர்த்து மணிப்பூர் மக்கள் கட்சித் தலைமையில் ஐந்து கட்சிக் கூட்டணி -இதில் ‘தேசியக் கட்சி’களான ராஷ்ட்ரீய ஜனதா தளம், தேசியவாதக் காங்கிரஸ், (ஐக்கிய) ஜனதாதளம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி- ஆகியவையும் அடக்கம், போட்டியிடுகின்றன. இதைத் தவிர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் திரிணாமூல் காங்கிரசும் பாரதிய ஜனதாவும் கூடக் களத்தில் உள்ளன.
சிறு இனக்குழுக்கள் பெரிய அளவில் பங்களிக்கக் கூடிய ஆற்றல் கொண்டவை. 100 நாட்களுக்கு மேல் நடந்த சாலை மறியலில் அவற்றின் பங்கு கணிசமானது. குடிதண்ணீர்ப் பிரச்சினை, ஒரு நாளில் 3 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வருவது, சாலைப் போக்குவரத்து, விலைவாசி ஆகியவை முக்கியப் பிரச்சினைகள்.

நாடறிந்த சமூகப் போராளி இரோம் ஷர்மிளா, ‘எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கவில்லை. எல்லோரும் வியாபாரம் செய்கிறார்கள்’ என்கிறார் கசப்பாக. அதுதான் மக்களின் எண்ணம் என்றால் அது தேர்தலில் பிரதிபலிக்கும்.
ஆனால், நிலைமை பதற்றமாக இருக்கிறது. மொத்தமுள்ள 2,357 வாக்குச் சாவடிகளில் 160 மட்டுமே இயல்பு நிலையில் உள்ளன. மற்றவை யாவும் பதற்றமான, மிகப் பதற்றமான நிலையில் உள்ளன என்கிறது தேர்தல் கமிஷன் என்றால், நிலைமையை ஊகித்துக் கொள்ளலாம். இந்த 160ல் 126, தலைநகர் இம்பாலைச் சுற்றி அமைந்தவை. ஆனால், இம்பால் மட்டுமே மணிப்பூர் அல்ல.
பஞ்சாப்
ஆட்சியில் இருப்பவரை வீட்டுக்கு அனுப்பு என்பதைப் பஞ்சாப் வாக்காளர்கள் தவறாமல் பின்பற்றி வருகிறார்கள். இப்போது பிரகாஷ் சிங் பாதல் தலைமையில் சிரோன்மணி அகாலிதளம்-பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இதன் அடிப்படையில் காங்கிரஸ் நம்பிக்கையோடு தேர்தலை எதிர்கொள்கிறது. அதற்கு சாதகமாக உள்ள இன்னொரு அம்சம், சி.அகாலி தளத்தில் ஏற்பட்ட பிளவு. கடந்த தேர்தலில் காங்கிரசிற்கு 41 சதவிகித வாக்குகள் கிடைத்தன. அகாலி-பா.ஜ.க. கூட்டணிக்கு 45 சதவிகித வாக்குகள் கிடைத்தன. இந்த முறை காங்கிரஸ் தனக்கு 44 சதவிகித வாக்குகள் கிடைக்கும் எனக் கணக்குப் போடுகிறது. 117 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க 59 இடங்கள் வேண்டும். காங்கிரஸ் 63 இடங்கள் கிடைக்கும் என நம்புகிறது.
உத்தரகண்ட்
உத்தரப்பிரதேசத்திலிருந்து பிரித்து தனி மாநிலமாக அமைக்கப்பட்டதற்குப் பின் இரண்டு தேர்தல்கள் நடந்திருக்கின்றன. இரண்டிலும் ஆட்சிகள் மாறின. இப்போது பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த முறை கடும் போட்டி நிலவுகிறது. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புண்டு எனக் கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன. ஆனால், அதே கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் இந்த முறை கூடுதல் இடங்களைப் பெறும் என்றும் சொல்கின்றன. கூட்டிக் கழித்துப் பார்த்தால் இரண்டிற்கும் இடையே உள்ள இடைவெளி 1 சதவிகிதம்.
70 இடங்கள் உள்ள சட்டமன்றத்தில் இந்தக் குறுகிய இடைவெளியைக் கொண்டு கணிப்பது கடினம். மாநிலத்தின் பல பகுதிகளில் பனி கொட்டிக் கொண்டிருக்கிறது. இது ஓட்டுப் பதிவின் சதவிகிதத்தைப் பாதிக்குமானால் எல்லாக் கணக்குகளும் தவிடு பொடியாகும்.
கோவா
மார்ச் 3ம் தேதிதான் தேர்தல் என்பதால் இன்னமும் கூட்டணிப் பேரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த இதழ் உங்கள் கைக்குக் கிடைக்கும்போது அநேகமாக அவை முடிவுக்கு வந்திருக்கலாம்.
2005லிருந்து காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது, அதை ஆட்சியிலிருந்து இறக்க வேண்டும் எனக் கங்கணம் கட்டிக் கொண்டு பா.ஜ.க. கூட்டணி அமைத்து வருகிறது. ஓட்டு பிரிந்து விடக் கூடாதென்ற நோக்கத்தோடு கோவாவின் முக்கியக் கட்சிகளில்ஒன்றான மகாராஷ்டிரவாடி, கோமந்தக் கட்சியுடன் (MGP) கூட்டணி அமைக்க முயற்சித்து வருகிறது.
கடந்த 2007 சட்டமன்றத் தேர்தலின்போது பா.ஜ.க. 33 இடங்களில் போட்டியிட்டு 14 இடங்களில் வென்றது. MGP 26 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், அது பெற்ற வாக்குகள் 8 சதவிகிதத்திற்கு மேல். எனவே இரண்டு கட்சிகளின் வாக்கு வங்கிகளும் ஒன்றுக்கொன்று உதவுமானால் அது இருவருக்குமே பயனுள்ளதாக இருக்கும் என்பது பா.ஜ.க.வின் கணக்கு. நாற்பது இடங்கள் உள்ள சட்டமன்றத்தில் ஒவ்வொரு ஃபிரண்டும் தேவை மச்சான்.
என்றாலும் கத்தோலிக்கர்கள் அதிகம் உள்ள மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால், அதை எளிதாக்கிவிடும் பொறுப்பை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதன் ஆட்சியில் நடைபெற்ற சுரங்க ஊழல், சுற்றுச்சூழல் சீர்கேடு போன்ற பிரச்சினைகள் எதிர்க்கட்சியான பா.ஜ.க.விற்கு சாதகமாக ஆகலாம்.
உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரசிற்கு ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பில்லை. என்றாலும் அந்த மாநிலத்தை அலட்சியப்படுத்த முடியாது. ஏனெனில், அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாநிலம். ஆட்சியாளர்களைப் பற்றியும் அரசியல் கட்சிகளைப் பற்றியும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எடை போடும் தராசு அதுதான். காரணம், இந்தியாவிலேயே மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலம் (உத்தரகண்ட் பிரிந்த பின்னும் கூட) அது. இந்தியாவிலேயே மிக ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் வசிக்கும் பண்டல்கண்ட் பகுதியும், மிகப் பெரும் செல்வந்தர்கள் உலவும் நொய்டா போன்ற பகுதிகளும் கொண்ட மாநிலம். மக்களவைக்கு 81 எம்.பி.க்களை அனுப்பும் மாநிலம் என்பதால் மத்தியில் ஆட்சியைத் தீர்மானிக்கும் வல்லமை கொண்ட மாநிலம். நேரு, சாஸ்திரி, இந்திரா, ராஜீவ், சந்திரசேகர், வாஜ்பாய் எனப் பல பிரதமர்களைத் தந்த மாநிலம்.
ஆனால், இந்த மாநிலத்தின் முக்கிய அரசியல் பாத்திரங்களை வகிப்பது காங்கிரசோ, பாரதிய ஜனதாவோ இல்லை. மாயாவதியின் தலைமையில் இயங்கும் பகுஜன் சமாஜ் கட்சியும், அது என்ன செய்தாலும் தவறு என்று சொல்லும் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சியும்தான்.
403 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்தில் 206 இடங்களைக் கடந்த தேர்தலில் வென்ற மாயாவதி, தனிப் பெரும்பான்மையோடு ஆட்சியில் இருக்கிறார். அவர் இந்தத் தேர்தலிலும் வென்று, ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதில் முனைந்திருக்கிறார். மாயாவதி ஆட்சியில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக ஊடக ஆய்வுகளுக்கான மையம் (Centre for Media studies) என்ற அமைப்பின் ஆய்வுகள் சொல்கின்றன. மாயாவதி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன என உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவித்திருக்கிறது. 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்று மத்திய அரசு, மாயாவதி அரசிற்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. மாயாவதி அரசில் அமைச்சர்களாக இருந்த சிலர் மீது சி.பி.ஐ. விசாரணை நடக்கிறது.
அந்த அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்துள்ள மாயாவதி, ‘இந்தப் புகார்கள் எல்லாம் அரசியல் உள்நோக்கம் கொண்டவை’ என்கிறார். ‘தலித் மக்கள், அதிகாரம் பெறுவதைப் பொறுக்காத உயர் ஜாதி ஊடகங்களின் விஷமம்’ என்கிறார்.
ஆனால், தேர்தல் என்று வரும்போது ஜாதிக் கணக்குகளையும், உயர்ஜாதியினரையும் அவரால் தவிர்க்க முடிவதில்லை. அவர் அறிவித்திருக்கும் 403 வேட்பாளர்களில் அதிகம் பேர் (117) உயர் ஜாதிகளைச் சேர்ந்தவர்கள்தான். தலித்கள் 88 பேர்தான்.
சமாஜ்வாதிக் கட்சிக்கும் இது வாழ்வா, சாவா தேர்தல்தான். முதலமைச்சராக இருந்த முலாயம் சிங் 1989ல் பதவியை இழந்த பின், அதை மீண்டும் நெருங்க முடியவில்லை. அப்போது அவருக்குக் கை கொடுத்த விஷயங்கள் இரண்டு. பிற்பட்ட வகுப்பினருக்கான மண்டல் போராட்டம். மற்றொன்று, இஸ்லாமியர்களின் ஆதரவு. இந்த இரண்டும் இப்போது கை நழுவிப் போய்விட்டன. பாப்ரி மஸ்ஜித் இடிப்பின் போது முதல்வராக இருந்த கல்யாண்சிங்கை தன் கட்சியில் சேர்த்துக் கொண்டதையடுத்து அவர் முஸ்லிம்களின் நம்பிக்கையை இழந்து விட்டார். இதைத் தவிர வாரிசு அரசியல், கட்சியைப்பிளந்து விட்டது. இந்தத் தேர்தலில் அவர் தன் மகன் அகிலேஷை முன்னிறுத்திக் களம் இறங்குகிறார். அவருக்கும் இது அக்னிப் பரீட்சைதான்.
முலாயம் சிங்கின் வாக்கு வங்கியான பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் குறிவைத்து பா.ஜ.க., உமா பாரதியை முன்னிறுத்துகிறது. ஆனால், அத்தோடு நின்றுவிடாமல் ஐந்தாண்டுகளில் 1.5 கோடி வேலைகள், 2 ரூபாய்க்கு ஒரு கிலோ கோதுமை, 3 ருபாய்க்கு ஒரு கிலோ அரிசி என வாக்குறுதிகளை அள்ளி விட்டிருக்கிறது. அதே சமயம் மற்ற மாநிலங்களில் தன் ஆட்சித் திறனுக்கு அடையாளமாக விளம்பரப்படுத்தும் நரேந்திரமோடியை இங்கு களம் இறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களின் ஓட்டும் தேவைப்படுமல்லவா?
தலித்களும். மேல் ஜாதியினரும் மாயாவதி பக்கம் போய்விட, பிற்பட்ட சமூகத்தினரது வாக்குகள் பிளவுபட. வெற்றியைத் தீர்மானிப்பது இஸ்லாமியர்களாக இருப்பார்கள் எனக் கணக்குப் போட்டுக் காய் நகர்த்துகிறது காங்கிரஸ்.இப்போது பிற்பட்ட வகுப்பினருக்கு இருந்துவரும் இடஒதுக்கீட்டில் நான்கரை சதவிகிதத்தை பிற்பட்ட முஸ்லிம்களுக்கு ஒதுக்கி, டிசம்பர் 22ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது மத்திய அரசு. காங்கிரஸ் வெற்றி பெற்றால் இந்த இட ஒதுக்கீட்டை இரண்டு மடங்காக -அதாவது 9 சதவிகிதமாக ஆக்குவோம் என சல்மான் குர்ஷித் பேச, அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது தேர்தல் ஆணையம்.
காங்கிரஸ் கையிலெடுத்திருக்கும் இன்னொரு ஆயுதம் வளர்ச்சித் திட்டங்களுக்காக அரசு, நிலங்களை கையகப்படுத்துதல். வங்கத்தில் இடதுசாரி கூட்டணி அரசை வீட்டுக்கு அனுப்ப மம்தாவிற்குக் கைகொடுத்த அதே ஆயுதம். கடந்த ஆண்டு நிலம் கையகப்படுத்தலுக்கு எதிராக விவசாயிகள் போராடிக் கொண்டிருந்தபோது ராகுல் காந்தி அவர்களோடு கலந்துகொள்ள, கைது செய்யப்பட்டு 3 மணி நேரத்தில் விடுவிக்கப்பட்டார். அதையடுத்து உ.பி.முழுவதும் காங்கிரஸ் போராட்டத்தில் இறங்கியது. ஆனால், அது பெரிதாக எடுபடவில்லை. ‘நிலத்தைக் கையகப்படுத்தக் கூடாது என்று இளவரசர் முதலில் தன் அம்மாவிடம் போய்ச் சொல்லட்டும்’ என மாயாவதி பதிலடி கொடுத்தார். இதுதான் காங்கிரசிற்கு உள்ள பிரச்சினை. ஊழல், லஞ்சம், நில கையகப்படுத்தல் என்று அது எதைத் தொட்டாலும் ‘நீ செய்யலையா?’ என்று குற்றச்சாட்டுக்கள் அதன் மீதே பூமராங் ஆகிறது.
ஆனால், 403 இடங்களில் எண்பதையாவது கைப்பற்றி விட வேண்டும் என கட்சிக்காரர்களிடம் சொல்லியிருக்கிறாராம் ராகுல் (இப்போது உள்ள இடங்கள் 22). அது நனவாக வேண்டுமென்றால், ஒரு காலத்தில் உ.பி.யில் காங்கிரசின் அடித்தளமாக இருந்த தலித், இஸ்லாமியர், பிற்பட்டோர் வாக்கு வங்கியை மீட்டெடுக்க வேண்டும். அது அத்தனை சுலபமல்ல.
அரசியலில் ராகுலின் எதிர்காலம் இந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளை- குறிப்பாக உ.பி.யில் காங்கிரசின் வெற்றியைப் பொறுத்திருக்கிறது. உ.பி.யில் காங்கிரஸ் கணிசமான இடங்களைப் பெற்றால், ராகுல் தனது கட்சிக்கு வெளியேயும், அதாவது மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறார் என்பதை அது காட்டும். அது, காங்கிரஸ் தன்னம்பிக்கையோடு 2014 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள உதவும். பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றால், அவர் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம் இருக்கிறது என்றுதான் அர்த்தம்.
இந்தத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெறுமானால், காங்கிரஸ் துணிந்து மம்தா பானர்ஜியை ஐக்கிய முற்போக்கு முன்னணியிலிருந்து கழற்றி விட்டு விடலாம் (அதன் வசம் 22 எம்.பி.க்கள். திரிணாமூல் வசம் 19). சமாஜ்வாதி வெற்றி பெறவில்லையென்றால், மம்தா கூட்டணியிலிருந்து கொண்டே மிரட்டலாம் அல்லது கூட்டணியைவிட்டு வெளியேறலாம். அப்போது ஆட்சிக்கு ஆபத்து.
இந்தத் தேர்தலில் மாயாவதி ஜெயித்தால், மக்கள் ஊழலைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றுதான் எண்ண வேண்டியிருக்கும். அதாவது, அன்னா ஹசாரேயின் இயக்கம் அடித்தள மக்களிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையோ என்ற கேள்வி தவிர்க்க இயலாது.
ஐந்து மாநிலங்களிலும் தேசியக் கட்சிகள் ஓரங்கட்டப்பட்டு மாநிலக் கட்சிகள் அரியணை ஏறினால், இந்திய அரசியல் ஒரு புதிய அத்தியாயத்தை நோக்கி நகர்கிறது என்று பொருள்.
ஆயிரம் அர்த்தங்களையும் அடுக்கடுக்கான கேள்விகளையும் பொதிந்து வைத்துக்கொண்டு நம் முன் நிற்கிறது இந்தத் தேர்தல்.
பெட்டி செய்தி: உ.பி. நட்சத்திரங்கள்
ராகுல் காந்தி
நேரு குடும்பத்து வாரிசு. ராஜீவ் காந்தியின் ஒரே மகன். 1970ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி பிறந்தவர். 1995ம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டம் பெற்றவர். அரசியலுக்கு வரும் முன் பேக்அப் சர்வீசஸ் பிரைவேட் லிமிட்டெட் என்ற அவுட் சோர்சிங் கம்பெனியின் இயக்குநர்.
2004 நாடாளுமன்றத் தேர்தலில் அவரது தந்தையின் தொகுதியான அமேதியில் போட்டியிட்டு வென்றதன் மூலம் அரசியலில் அடியெடுத்து வைத்தார். 2007 செப்டம்பரில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2009ல் மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அகிலேஷ் யாதவ்
முலாயம் சிங் யாதவின் மகன். 1973ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பிறந்தவர். பொறியியல் பட்டதாரி. மூன்று குழந்தைகள். மனைவி டிம்பிள், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் நடிகர் ராஜ்பப்பரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்றுப் போனார்.
ஆனால், அகிலேஷ் 2000, 2004, 2009 ஆகிய தேர்தல்களில் வெற்றி கண்டு மூன்றுமுறை எம்.பி.ஆனவர். இப்போது அப்பாவின் கட்சியான சமாஜ்வாதி கட்சியின் உ.பி.மாநிலத் தலைவராக உள்ளார். உமா பாரதி
நாத்திகர் ஒருவரது மகளாகப் பிறந்த மதப் பிரசாரகர். மத்தியப்பிரதேசத்தில் மே 3 1959ல் பிறந்த இவர், குவாலியர் ராணி ராஜமாதா சிந்தியாவின் அரவணைப்பில் வளர்ந்தவர். 5 முறை மக்களவை உறுப்பினராக இருந்தவர். 2003ல் மத்தியப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாரதியஜனதா கட்சி 75 சதவிகித இடங்களைப் பிடிக்கக் காரணமாக இருந்தவர். அப்போது அந்த மாநில முதல்வரும் ஆனார். இப்போது உ.பி.யில் களம் காண்கிறார்.
|