கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!

கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!

இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை வேகமாக பரவிவருகிறது. ஆனால் கடந்த ஆண்டைபோல் இல்லாமல் இந்த ஆண்டு கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகளும், தடுப்பூசிகளும் நமக்கு கிடைத்திருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரிக்க அதிகரிக்க மக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் மிகக் குறுகிய காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதால் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர். மேலும் அதுகுறித்த பல சந்தேகங்கள் மற்றும் கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர். கொரோனா தடுப்பூசி குறித்த சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கிறார் மருத்துவர் அருண்குமார்.

கொரோனா 2ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் உருமாறி இருக்கிறதா? அல்லது அதே வைரஸ்தான் வேகமாக பரவுகிறதா?

பொதுவாக வைரஸ்கள் இனப்பெருக்கம் அடையும்போது அதன் மரபணுக்களில் மாற்றம் ஏற்படுவது சகஜம்தான். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதிலிருந்து இதுவரை உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 4000 உருமாற்றமடைந்த வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். சில உருமாற்றமடைந்த வைரஸ்களில் நோய்த்தொற்று சற்று அதிகமாக இருக்கும். ஆனால் இரண்டாம் அலையில் இதுவரை ஆராய்ச்சி செய்ததில், 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்தால் அதில் கிட்டத்தட்ட 500 பேருக்குத்தான் உருமாற்றமடைந்த கொரோனா தொற்று இருப்பதாகவும், மற்றவர்களுக்கு பழைய கொரோனாவைரஸ்தான் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா தடுப்பூசி நம்மிடம் கைவசம் இருக்கிறது. பலர் தடுப்பூசி எடுத்துக்கொண்டு இருந்தாலும், இந்த இரண்டாம் அலையில் அதிதீவிரமாக பரவுவதன் காரணம் என்ன?

ஒரு சமூகத்தைவிட்டு ஒரு குறிப்பிட்ட நோய் ஒழிய வேண்டுமானால், அந்த சமூகத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 70-80% பேருக்கு நோயெதிர்ப்பு சக்தி இருப்பது அவசியம். தடுப்பூசி செலுத்தவதன்மூலம் இந்த கூட்டு நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமானால் இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 80% பேருக்கு தடுப்பூசி செலுத்தவேண்டும். அதாவது 90லிருந்து 100 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.

மேலும், தற்போது நாம் பயன்படுத்தும் தடுப்பூசியை முதல் தலைமுறை தடுப்பூசி என்றுதான் சொல்கிறோம். அதாவது கிருமி பரவுவதற்கான தன்மையை இந்த தடுப்பூசியால் 60-70% தான் தடுக்கமுடியும். அதனால்தான் தடுப்பூசி செலுத்தியபிறகும் கொரோனா தொற்று உறுதியாவதை நாம் பார்க்கிறோம். ஆனால் தீவிர சிகிச்சை பெறுதல் மற்றும் இறப்பு விகிதத்தை இந்த தடுப்பூசி பெரும்பாலும் குறைத்துள்ளது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இஸ்ரேல், பிரிட்டன் போன்ற நாடுகளில் 70%க்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தி நோய்க்கிருமி பரவுவது குறைந்திருப்பதை அவர்கள் உறுதிசெய்துள்ளனர்.

எந்தெந்த வயதினர் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம்?

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருமே கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தடுப்பூசி உற்பத்தியை கருத்தில்கொண்டு முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோர் என வயதுவாரியாக பிரித்து செலுத்தப்பட்டு வருகிறது. சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

கோவிஷீல்டு, கோவாக்ஸின் தடுப்பூசிகளுக்கு இடையேயான வேறுபாடுகள் என்னென்ன?

தடுப்பூசிகளில் நிறைய வகைகள் உள்ளன. ஒரு வைரஸையே முற்றிலுமாக செயலிழக்க வைத்து அதை செயற்கையாக உடலில் செலுத்தி, நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குவதை ‘killed vaccine' என்று சொல்லுகிறோம். கோவாக்ஸின் தடுப்பூசி இந்த வகையைச் சேர்ந்ததுதான். கோவிஷீல்டு தடுப்பூசியில் சாதாரண சளி வைரஸின் மூலக்கருவை எடுத்து, அதனுள் கொரோனா வைரஸின் மூலக்கரு ஆர்.என்.ஏவான ஸ்பைக் புரதத்தை அதற்குள் செலுத்தி அதன்மூலமாக நோயெதிர்ப்பு சக்தியை உண்டுபண்ணும் முறையை பின்பற்றுகின்றனர்.

இரண்டுக்குமான முக்கிய வித்தியாசம் என்னவென்றால், கோவிஷீல்டு தடுப்பூசியானது ஸ்பைக் புரதத்திற்கு எதிராகத்தான் நோயெதிர்ப்பு சக்தியை உண்டுபண்ணும். அதனால் தீவிர நிமோனியாவை கட்டாயம் தடுக்கும். ஆனால் நோய்ப்பரவலை 60-70% தான் தடுக்கும். அதேசமயம் கோவாக்ஸின் தடுப்பூசியில் முழு வைரஸையும் உள்ளே செலுத்துவதால் உருமாறிய வைரஸுகளையும் எதிர்த்துப் போராடி அதிலிருந்தும் பாதுகாப்புத் தரும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மேலும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் மிகச்சிலருக்கு சில பக்கவிளைவுகள் இருப்பதாகக் கூறப்படுவதால் அதுகுறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com