இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!

இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!

கர்நாடகாவிலும், ஆந்திராவிலும் ஹனுமனின் பிறந்த இடம் தொடர்பாக மோதலும் சர்ச்சையும் வலுத்துள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வடக்கு கர்நாடகாவின் ஹம்பிக்கு அருகிலுள்ள கிஷ்கிந்தாவில் உள்ள அஞ்சயநாத்ரி மலையில் ஹனுமன் பிறந்தார் என்று கர்நாடக தரப்பு கூறுகிறது. ஆந்திர தரப்போ, திருமலையின் ஏழு மலைகளில் உள்ள அஞ்சநாத்ரியை ஹனுமன் பிறந்த இடமாகக் கைகாட்டுகிறது. இந்த இரண்டு இடங்களைத் தாண்டி, இப்போது, ராமாயணத்தில் உள்ள குறிப்புகளின் அடிப்படையில் மூன்றாவது இடமும் ஹனுமன் பிறப்பிடமாக இன்னொரு தரப்பினர் கூறுகின்றனர்.

ஹனுமனின் பிறந்த இடத்தை முதலில் கோரியவர் யார்?

இந்த சர்ச்சையை முதலில் எழுப்பியது ஆந்திராதான். ஆந்திராவின் திருமலை வெங்கடேஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டி.டி.டி) டிசம்பரில், ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. வேத அறிஞர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் ஆகியோரை உள்ளடக்கிய இந்த நிபுணர் குழு, ஹனுமனின் உண்மையான பிறப்பிடம் தொடர்பாக ஓர் அறிக்கையை ஆய்வு செய்து ஏப்ரல் 21ம் தேதிக்குள் சமர்ப்பிக்க இருக்கிறது.

இது தொடர்பாக பேசியுள்ள டிடிடி நிர்வாக அதிகாரி கே.எஸ்.ஜவஹர் ரெட்டி என்பவர், "எங்களின் கூற்றுக்களை ஆதரிக்க புராண, ஜோதிட மற்றும் அறிவியல் சான்றுகள் உள்ளன. இதனால்தான் தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முரளிதர் சர்மா, எஸ்.வி.வேத பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சன்னிதனம் சர்மா, இஸ்ரோ விஞ்ஞானி ரெமெல்லா மூர்த்தி, மாநில தொல்பொருள் துணை இயக்குநர் விஜய்குமார், பேராசிரியர்கள் ரணிசாதசிவ மூர்த்தி, ஜே.ராமகிருஷ்ணா மற்றும் சங்கரா நாராயணா ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஹனுமனின் பிறந்த இடம் குறித்த குழு அனைத்து ஆதாரங்களையும் தொடர்புடைய தகவல்களையும் ஒரு புத்தக வடிவில் கொண்டு வந்து எங்களிடம் சமர்ப்பிக்கும். சிவன், பிரம்மா, பிரம்மந்தா, வராஹா மற்றும் மத்ஸ்ய புராணங்களைத் தவிர வெங்கடச்சால மகாதியம் மற்றும் வராஹமிஹிராவின் பிரஹதசமிதா போன்ற வேத ஆதாரங்களை இதற்கு சான்றாக கண்டறிந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக எதிர்ப்பு ஏன்?

ஹனுமன் பிறப்பிடம் குறித்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூற்றுகளில் அதிருப்தி அடைந்த கர்நாடக அமைச்சர்கள், ஹம்பிக்கு அருகிலுள்ள அஞ்சயநாத்ரி மலையில் ஹனுமன் பிறந்ததற்காக, மலையில் ராமாயணத்தில் ஒரு குறிப்பு இருப்பதாக ஒரே குரலாக ஒலிக்கின்றனர். அங்கு ராமரும் லக்‌ஷ்மணனும் ஹனுமனை சந்தித்த இடம் என்று விவரிக்கப்படுகிறது. இந்த மலையில் ஹனுமன் கோயில் உள்ளது, அதில் பாறையில் செதுக்கப்பட்ட சிலையும், அருகிலுள்ள ராமர், சீதா மற்றும் அஞ்சனா தேவி கோயில்களும் உள்ளன என்பது அவர்களின் கூற்றாக உள்ளது.

"ஹனுமனின் பிறப்பிடம் கர்நாடகாவில் உள்ளது, இப்போது ஹனுமான் ஜன்மாஸ்தலா (கன்னடத்தில் பிறந்த இடம்) என்ற குறிச்சொல்லுடன் இந்த இடத்தை ஒரு புனித யாத்திரை மையமாக மாற்றுவோம்" என்று கர்நாடக வேளாண் அமைச்சரான பி.சி.பாட்டீல் தெரிவித்துள்ளார்.

கர்நாடக இப்படி பேச்சோடு நிற்கவில்லை. திருப்பதி தேவஸ்தானம் குழு அமைக்கப்பட்ட உடனேயே, கர்நாடக சுற்றுலாத் துறை அஞ்சயநாத்ரி மலையை ஒரு மத சுற்றுலா மையமாக மாற்றும் திட்டத்தைத் தொடங்கியது. கடந்த மாதம், சுற்றுலாத் துறை அமைச்சர் சி.பி.யோகேஸ்வர் தனது மற்ற சகாக்களான அமைச்சர்கள் கே.எஸ்.ஈஸ்வரப்பா, பி.சி.பாட்டீல், கோட்டா சீனிவாஸ் பூஜாரி மற்றும் அரவிந்த் லிம்பவல்லி ஆகியோரை சந்தித்து ரூ.50.18 கோடி வளர்ச்சி திட்டம் குறித்து விவாதித்தார். அடிக்கல் நாட்டுவதற்கு முன் விரிவான திட்ட அறிக்கை அனுப்பப்பட்டு அமைச்சரவை ஒப்புதலுக்காக துறை காத்திருக்கிறது. இந்த ஒப்புதல் கிடைப்பதற்கு மத்தியில் இந்த எல்லா அமைச்சர்களும் அஞ்சயநாத்ரி மலைக்கு விசிட் அடித்து ஆய்வு நடத்தவுள்ளனர்.

மூன்றாவது இடம் எங்கு?

மூன்றாவது இடத்துக்கு போட்டி போடுவது எந்த அரசோ, அமைச்சர்களோ கிடையாது. இது ஒரு மடாதிபதி. கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தில் உள்ள ராமச்சந்திரபுரா மடத்தின் தலைவரான ராகவேஸ்வர பாரதி என்பவர்தான் அவர். கர்நாடகாவின் கோகர்ணாவின் கட்லே கடற்கரையில்தான் உண்மையான ஹனுமன் பிறப்பிடம் இருப்பதாக ராகவேஸ்வர பாரதி கூறுகிறார்.

"வால்மீகி ராமாயணத்தில் ஹனுமன் தானே கோகர்ணாவில் பிறந்ததாக சீதாவிடம் கூறப்படுகிறது. ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு, கோகர்ணர் ஹனுமனின் ஜன்மபூமி என்றும், கிஷ்கிந்தாவில் அஞ்சயநாத்ரி அவரது கர்மபூமி என்றும் சொல்லலாம்.

வால்மீகி ராமாயணத்தில், ஹனுமனின் பிறந்த இடம் கோகர்ணாவில் உள்ளது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ராம் நவாமியால் கோகர்ணாவில் உள்ள கோயிலை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது" என்று ராகேஸ்வர பாரதி கூறுகிறார்.

ஹனுமன் பிறந்த இடம் தொடர்பாக இரு மாநில அரசுகள் மற்றும் மடாதிபதி இடையே ஏற்பட்டுள்ள இந்த திடீர் மோதலும் சர்ச்சையும், பக்தர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

- உறுதுணை செய்திக் கட்டுரை: The Indian Express

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com