”மேற்கு வங்கத்தில் பாஜகவை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது; ஆனால்...!” - பிரசாந்த் கிஷோர்

”மேற்கு வங்கத்தில் பாஜகவை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது; ஆனால்...!” - பிரசாந்த் கிஷோர்
”மேற்கு வங்கத்தில் பாஜகவை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது; ஆனால்...!” - பிரசாந்த் கிஷோர்

'மேற்கு வங்கத்தில் பாஜகவே வெற்றி பெறும் என்று, தான் பேசியதாக வெளியாகியுள்ள சர்ச்சைக்குரிய ஆடியோ குறித்து விளக்கம் அளித்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.

இந்திய அளவில் அரசியல் கட்சிகளுக்கு ஆலோசகராக இருந்து, அவர்களின் கட்சியைத் தேர்தலில் வெற்றிபெற வைக்கும் வியூக வகுப்பாளராக அறியப்பட்டவர் பிரசாந்த் கிஷோர். இதற்காக, ஐ-பேக் என்கிற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.  தமிழகத்தில் திமுகவுக்கும், மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் அவர் தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்கள் சிலருடன்  பிரசார்த் கிஷோர் பேசிய உரையாடல் சமூக வலைதளங்களில் விவாதப்பொருளானது. அதில், மேற்குவங்கத் தேர்தலில் நிச்சயமாக பாஜகவுக்கு குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதம் கிடைக்கும் என அவர் பேசியது மேற்கு வங்க தேர்தல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து என்.டி.டிவி ஆங்கில தொலைக்காட்சிக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில் பாஜக பற்றி தான் பேசியது குறித்து விளக்கமளித்துள்ளார்.  

அந்தப் பேட்டியில், "மேற்குவங்கத்தில் பாஜக ஒரு வலிமையான அரசியல் சக்தியே. அதன் வீச்சை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. ஆனால், இந்தத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிதான் அங்கு ஆட்சியைப் பிடிக்கும். பாஜக 100 இடங்களைத் தாண்டாது என்றுதான் அந்த உரையாடலில் கூறியிருந்தேன். ஆனால் பாஜக வலிமையாக இருக்கிறது என்று நான் சொன்னது மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. பாஜக வலிமையாக இருந்தாலும் மேற்குவங்கத் தேர்தலில் அது தோல்வியை சந்திக்கும் என நான் கூறியது கருத்தில் கொள்ளப்படவில்லை.

ஒரு தேர்தல் வியூக வகுப்பாளராக எனது எதிரியைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. மேற்குவங்கத்தில் கள ஆய்வு மோடிக்கு ஆதரவு 40 சதவீதம் என்று தெரிந்தது. பாஜகவுக்கு கிடைக்கும் வாக்குகளுக்கு பிரதமர் மோடி மீதான அபிமானமே முக்கியக் காரணம். இதன் அடிப்படையிலேயே நான் அந்தக் கருத்தைக் கூறினேன். 2015ல் ஐபேக் தொடங்கப்பட்டதில் இருந்தே நாங்கள் பாஜகவுக்கு எதிரான கட்சிகளுக்காகவே கொள்கை வகுத்துக் கொடுக்கிறோம். இந்தத் தேர்தலில் திரிணாமுல் ஆட்சியைத் தக்கவைக்காவிட்டால் நான் எனது பணியிலிருந்தே விலகிக் கொள்கிறேன்.

வலிமையாக இருப்பதற்கும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வாங்குவங்கி 45%க்கும் மேலானது. அதனால் அக்கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும். திரிணாமுலுக்கு எதிரான அலையை கணிக்க முற்பட்டபோது அது மிகமிகக் குறைவாகவே இருந்தது. அதுவும் குறிப்பிட்ட சில பிரமுகர்களைச் சார்ந்தே இருந்தது. மேற்குவங்கத்தில் இன்னமும் மம்தா பானர்ஜி மக்களின் அன்பை, மதிப்பை, நம்பிக்கையைப் பெற்ற தலைவராகவே இருக்கிறார். அதுவும் அவர் பெண்களின் அபிமானம் பெற்ற தலைவராக இருக்கிறார்" என்று  பிரசாந்த் கிஷோர் கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com