மேற்கு வங்க தேர்தல் வன்முறையில் 5 பேர் சுட்டுக் கொலை - கலவரத்திற்கு காரணம் யார்?

மேற்கு வங்க தேர்தல் வன்முறையில் 5 பேர் சுட்டுக் கொலை - கலவரத்திற்கு காரணம் யார்?
மேற்கு வங்க தேர்தல் வன்முறையில் 5 பேர் சுட்டுக் கொலை - கலவரத்திற்கு காரணம் யார்?

மேற்கு வங்க மாநிலத்தில் 4-வது கட்டத் தேர்தலின்போது நிகழ்ந்த வன்முறையில் 5 பேர் கொல்லப்பட்டனர். கலவரம் ஏற்பட யார் காரணம் என பிரதமர் மோடியும், முதலர் மம்தா பானர்ஜியும் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ள நிலையில், குறிப்பிட்ட பகுதிக்கு 72 மணி நேரத்துக்கு எந்த அரசியல் கட்சித் தலைவரும் செல்லக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கெனவே 3 கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில், நேற்று 44 தொகுதிகளுக்கு 4-வது கட்டமாக தேர்தல் நடைபெற்றது. கூச் பெஹார் மாவட்டத்தில், சீத்தல்குச்சி தொகுதியில் வன்முறை ஏற்பட்டது. காலை 9.30 மணியளவில் 126-வது வாக்குச்சாவடியில் சிலர் வாக்களிக்கவிடாமல் தடுக்கப்பட்டதாக தகவல் வந்த நிலையில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விரைந்தனர்.

அப்போது ஏற்பட்ட கைகலப்பில் ஒரு குழந்தை கிழே விழுந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து பாதுகாப்புப் படையினரின் வாகனம் மீது ஒரு கும்பல் கல்வீசி தாக்கியுள்ளது. அப்போது தற்காப்புக்காக அவர்கள் வானத்தை நோக்கி சுட்டனர். இச்சம்பவத்தை தொடர்ந்து சில மணி நேரத்தில், 186-வது வாக்குச்சாவடிக்குள் நுழைந்த கும்பல், வாக்குப்பதிவு மைய அதிகாரியை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதை தடுக்க முயன்ற மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரரின் துப்பாக்கியை அவர்கள் பறிக்க முயன்றதாகத் தெரிகிறது. அப்போது சிஐஎஸ்எப் வீரர்கள் சுட்டத்தில் 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இதனிடையே மேற்கு வங்கத்தில் மற்ற இடங்களில், மம்தா பானர்ஜியின் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மோடியின் பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதல்களுக்கு இடையே ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தோல்வி பயத்தில் மம்தா பானர்ஜி, மத்திய படைகளுக்கு எதிராக மக்களை தூண்டிவிடுவதாக குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு பதிலடி தந்துள்ள மம்தா பானர்ஜி, வாக்களிக்க வரிசையில் நின்ற மக்களை மத்திய பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாவும், உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக சித்தல்குச்சி தொகுதியில், ஆனந்த் பர்மன் என்ற முதல் தலைமுறை வாக்காளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தங்களது முகவராக செயல்பட்ட ஆனந்த் பர்மனை, திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் சுட்டுக் கொன்றதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதனிடையே கூச் பெஹார் மாவட்டத்துக்குள் 72 மணி நேரத்துக்குள் எந்த அரசியல்வாதியும் நுழையக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 5-வது கட்ட தேர்தல் வருகிற 17 ஆம் தேதி நடைபெறும் நிலையில், 72 மணி நேரத்துக்கு முன்னதாகவே வீடுவீடாக வாக்கு சேகரிப்பதற்கு தடை விதித்துள்ளது. மேலும் கூடுதலாக 71 கம்பெனிகள் மத்திய பாதுகாப்பு படையினரும் விரைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com