பாதுகாப்பு வளையத்திற்குள் வாக்கு எண்ணும் மையங்கள்: 3 அடுக்கு பாதுகாப்பு என்றால் என்ன?

பாதுகாப்பு வளையத்திற்குள் வாக்கு எண்ணும் மையங்கள்: 3 அடுக்கு பாதுகாப்பு என்றால் என்ன?
பாதுகாப்பு வளையத்திற்குள் வாக்கு எண்ணும் மையங்கள்: 3 அடுக்கு பாதுகாப்பு என்றால் என்ன?

சென்னையின் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் நேற்று வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் உள்ளிட்டவை துப்பாக்கி ஏந்திய காவல்துறையின் பாதுகாப்புடன் மொபைல் யூனிட் மூலம் ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் அண்ணா பல்கலை ஆகிய வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பத்திரமாக பூட்டி சீல் வைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இன்று மாலைக்குள் இந்த பணிகள் அனைத்தும் முடிவடையவுள்ள நிலையில் மூன்று மையங்களும் துணை ராணுவத்தின் பாதுகாப்பு வளையத்திற்குள் முழுவதுமாக கொண்டு வரப்பட்டுள்ளது. மூன்று மையங்களுக்கும் 7 கம்பெனி துணை ராணுவத்தினர் 24 மணி நேர சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

3 வாக்கு எண்ணும் மையங்களிலும் 3 ஆயிரம் போலீசார் பதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மையத்திலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முதல் அடுக்கில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரும்,

இரண்டாம் அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை அல்லது ஆயுதப்படை போலீசாரும்,

மூன்றாம் அடுக்கில் உள்ளூர் காவல்துறையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்படும் அறைகள் முழுவதுமாக சிசிடிவி கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் மூன்று மையங்களிலும் சேர்த்து சுமார் 2 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் அறைகளின் உள்ளே பொருத்தப்பட்டுள்ளது. இதனை பார்ப்பதற்காக வெளியே பெரிய அளவிலான எல்இடி ஸ்கிரீன் அமைக்கப்பட்டு காவல்துறையினர் மற்றும் முகவர்கள் காண்பதற்கு தேர்தல் ஆணையம்  சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அறையும் பூட்டி சீல் வைக்கப்பட்ட பின் அந்த சாவியானது தேர்தல் வழிகாட்டு நெறிமுறைப்படி துணை ராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படும். அதன் பின்னர் காவல்துறையினருக்கு கூட அந்த அறைகளின் அருகே செல்ல அனுமதி மறுக்கப்படும். மேலும், ஒவ்வொரு மையத்தின் நுழைவு வாயிலிலும் உள்ளூர் காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்ட உரிய அடையாள அட்டை உடையவர்கள் மட்டுமே மையத்திற்கு உள்ளே செல்ல அனுமதிப்பார்கள். 

மேலும், தேர்தல் வாக்கு எண்ணும் நாள் நெருங்கும் சமயத்தில் தற்போதுள்ள பாதுகாப்பை இரட்டிப்பாக்கவும் சென்னை காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- செய்தியாளர் சுப்ரமணியன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com