தேர்தலில் 100% வாக்குப்பதிவை எட்ட முடியாதது ஏன்? கட்டாய வாக்குப்பதிவை கொண்டு வர முடியுமா?

தேர்தலில் 100% வாக்குப்பதிவை எட்ட முடியாதது ஏன்? கட்டாய வாக்குப்பதிவை கொண்டு வர முடியுமா?
தேர்தலில் 100% வாக்குப்பதிவை எட்ட முடியாதது ஏன்? கட்டாய வாக்குப்பதிவை கொண்டு வர முடியுமா?

தேர்தலில் 100% வாக்குப்பதிவை எட்ட முடியாதது ஏன்? கட்டாய வாக்குப்பதிவை கொண்டு வர முடியுமா?

தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயக கடமை. ஆனால் சிலர் அந்த ஜனநாயக கடமையை ஆற்ற தவறுவதால்தான் 100 சதவிகித வாக்குப்பதிவு என்பது கனவாகவே இருக்கிறது. இது இந்தியா என்பதால் பிரச்னையில்லை. ஒரு வேளை நாம் பிரேசிலிலோ, ஆஸ்திரேலியாவிலோ இருந்தால் தேர்தலில் வாக்களிக்கவில்லை எனில் கட்டாயம் அபராதம் செலுத்தவேண்டி இருக்கும்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு நம்மை ஆளப்போவது யார்? வேலைவாய்ப்பு, வருமானம், அத்தியாவசிய பொருட்களின் விலை , கல்வி என அனைவரின் வாழ்க்கையையே தீர்மானிக்கப் போகும் நபர் யார்? என்பதை தேர்வு செய்யும் மிக முக்கிய தருணமே தேர்தல்கள். உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் தொடங்கி சட்டமன்றம், நாடாளுமன்றம் என தேர்தல்களில் வாக்களிப்பது நமது ஜனநாயக கடமைகளில் ஒன்று. ஆனால் அனைவரும் அந்தக் கடமையை சரியாக செய்கிறோமா? இல்லை.

தமிழக சட்டமன்ற தேர்தலையே உதாரணமாக எடுத்து கொள்ளலாம். குறிப்பாக சென்னை போன்ற நகரப் பகுதிகளில் எப்போதுமே வாக்குப்பதிவு சதவிகிதம் என்பது குறைவாகவே இருக்கிறது. 100 சதவிகித வாக்குப்பதிவை உறுதி செய்யவேண்டும் என தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்தாலும் அது நிறைவேறாமலேயே இருக்கிறது. இதற்கு வாக்குப்பதிவை கட்டாயமாக்க வேண்டும் என்ற கருத்தை சிலர் முன்வைக்கின்றனர்.

உலகளவில் 22 நாடுகளில் கட்டாய வாக்குப்பதிவு என்பது அரசமைப்பு சட்டத்திலேயே சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது வாக்களிக்க தகுதிபெற்றவர்கள் அனைவரும் கட்டாயம் தங்களின் வாக்கினை பதிவு செய்யவேண்டும் இல்லையெனில் அபராதம் செலுத்த நேரிடும். அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், சிங்கப்பூர், பிரேசில், பொலிவியா உள்ளிட்ட 22 நாடுகளில் கட்டாய வாக்குப்பதிவு என்பது நடைமுறையில் இருக்கிறது. முதன்முறையாக 1893ஆம் ஆண்டு பெல்ஜியம் நாட்டில்தான் கட்டாய வாக்குப்பதிவு அமல்படுத்தப்பட்டது. இங்கு வாக்களிக்கவில்லை எனில் அபராதம் செலுத்த வேண்டும். தொடர்ந்து 4 முறை தேர்தலைப் புறக்கணித்ததால் வாக்காளர் அடையாள அட்டை ரத்து செய்யப்படும்.

ஆஸ்திரேலியாவில் 1924ஆம் ஆண்டு முதல் கட்டாய வாக்குப்பதிவு நடைமுறையில் உள்ளது. இங்கு வாக்களிக்க தவறியவர்கள் உரிய காரணத்தை அரசிடம் தெரியப்படுத்த வேண்டும், இல்லையெனில் ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். இங்கு எப்போதுமே 90 சதவிகிதத்துக்கு மேல்தான் வாக்குகள் பதிவாகும். அடுத்ததாக பிரேசிலை எடுத்து கொண்டால், அபராத தொகை வெறும் 100 ரூபாய்தான் என்றாலும், வாக்களிக்க தவறியவர்கள் பாஸ்போர்ட், வங்கிக்கடன் பெறுதல் உள்ளிட்டவைகளில் சிக்கலை சந்திக்க நேரிடும். ஈக்வடார் நாட்டில் வாக்களிக்க தவறினால், அடிப்படை ஊதியத்தில் இருந்து 10 சதவிகிதம் அபராதம் செலுத்த வேண்டும்.

பெரு நாட்டில், 500 ரூபாய் முதல் 1800 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். சிங்கப்பூரிலும்கூட கட்டாய வாக்குப்பதிவு முறை நடைமுறையில் உள்ளது. தேர்தலில் வாக்களிக்க தவறுவோரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும். பின்னர் உரிய காரணத்தை கூறினால் பெயர் சேர்க்கப்படும், இல்லையெனில் 3500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். ஆனால் கட்டாய வாக்குப்பதிவுக்கு எதிரான கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. அதிகபட்ச வாக்குப்பதிவை பெறவேண்டும் என்ற நோக்கில் கட்டாய வாக்குப்பதிவு கொண்டு வரப்பட்டாலும், வாக்களித்துதான் ஆகவேண்டும் என கட்டாயப்படுத்துவது மக்களின் உரிமையில் தலையிடுவதாக அமைகிறது என சிலர் கருதுகின்றனர். இதனை வெளிக்காட்டும் வகையில் பிரேசிலில் 2016 மேயர் தேர்தலில் 41 சதவிகித வாக்காளர்கள் வெற்று வாக்குச்சீட்டையே செலுத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com