குன்னம் தொகுதியில் கள்ள ஓட்டு போட முயன்ற இளைஞரை மடக்கி பிடித்த திமுகவினர்!

குன்னம் தொகுதியில் கள்ள ஓட்டு போட முயன்ற இளைஞரை மடக்கி பிடித்த திமுகவினர்!
குன்னம் தொகுதியில் கள்ள ஓட்டு போட முயன்ற இளைஞரை மடக்கி பிடித்த திமுகவினர்!

பெரம்பலூர் அருகே வேப்பூரில் இளைஞர் ஒருவர் கள்ள ஓட்டு போட முயன்றுள்ளார். திமுகவினர் அவரை கையும் களவுமாக பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். காவல்துறை மற்றும் திமுகவினரிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு இளைஞர் ஓட்டம் பிடித்தார்.

பெரம்பலூர் அருகே குன்னம் தொகுதிக்குட்பட்ட வேப்பூர் வாக்குச்சாவடி பதட்டமான வாக்குச்சாவடி ஆகும். இதனால் அங்கு மத்திய பாதுகாப்பு படையினரின் கூடுதல் பாதுகாப்போடு வாக்குப்பதிவு நடைபெற்றது. புதிய வாக்காளர்கள் உட்பட அனைத்து வாக்காளர்களின் ஆவணங்கள் கடுமையாக சோதிக்கப்பட்ட பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது. சந்தேகம் இருப்பின் வாக்குச்சாவடியின் அருகில் இருக்கும் கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்றுவர அறிவுறுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் ரமேஷ் என்பவரின் வாக்காளர் அடையாள அட்டையுடன் இளைஞர் ஒருவர் வாக்களிக்க வந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்த திமுகவினர், ரமேஷ் என்ற அடையாள அட்டையில் ஏற்கனவே வாக்குப்பதிவு ஆகியுள்ளதை அறிந்து சந்தேகமடைந்து விசாரித்தனர்.

அப்போது வாக்களிக்க வந்த இளைஞர் அருகில் உள்ள நன்னை கிராமத்தை சேர்ந்தவர் என்றும் கள்ள ஓட்டு போட வந்துள்ளார் என்றும் தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞரை கையும் களவுமாக பிடித்த திமுகவினர் அதிகாரிகளிடம் ஓப்படைத்தனர். அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரித்ததில் கள்ள ஓட்டு போட முயற்சித்தது உண்மை என தெரியவந்தது. கள்ள ஓட்டு போட முயன்ற இளைஞர் தாம் பள்ளியில் படிப்பதாகவும் தன்னை மன்னித்து விடுமாறும் அதிகாரிகளின் காலில் விழுந்து கெஞ்சினார். இதையடுத்து அதிகாரிகள், போலீஸார், திமுகவினர் கள்ள ஓட்டு போட முயன்ற இளைஞரை மன்னித்து அனுப்பிவைத்தனர்.

ஏற்கனவே பதட்டமான வேப்பூர்  வாக்குச்சாவடியில் இளைஞர் ஒருவர் கள்ள ஓட்டு போட முயன்றதால் கூடுதல் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com