மேற்கு வங்கத்தின் 127 தொகுதிகளில் பட்டியலின மக்களைக் கவர நடக்கும் தேர்தல் யுத்தம்!

மேற்கு வங்கத்தின் 127 தொகுதிகளில் பட்டியலின மக்களைக் கவர நடக்கும் தேர்தல் யுத்தம்!
மேற்கு வங்கத்தின் 127 தொகுதிகளில் பட்டியலின மக்களைக் கவர நடக்கும் தேர்தல் யுத்தம்!

மேற்கு வங்க தேர்தல் களம் பல்வேறு விவாதங்களையும் எதிர்பார்ப்புகளையும், கூடவே சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஆட்சிக்கட்டிலில் அமரப்போவது யார் என்று கணிப்பதற்கு முன் அங்கிருக்கும் கள நிலவரங்களை அறிந்துகொள்வது அவசியம்.

அதன்படி, மேற்கு வங்கத்தில் முஸ்லிம் வாக்காளர்கள் எண்ணிக்கை என்பது கணிசமான அளவில் இருக்கிறது. அம்மாநிலத்தில் புதிதாக கட்சி தொடங்கி ஆட்சிக்கு வர எண்ணுபவர்களின் முதல் இலக்கே முஸ்லிம் வாக்குகளை கவருவதாகத்தான் இருக்கும். காரணம், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநில மக்கள் தொகையில் 27% முஸ்லிம் மக்கள்தான் இருக்கிறார்கள். ஆகவே, இஸ்லாமிய வாக்குகள் யாருக்கு என்பது தான் தேர்தல் காலங்களில் முக்கியமான கேள்வியாக இருக்கும். மேற்கு வங்கம் என்றால் முஸ்லிம்கள் கணிசமாக இருக்கிறார்கள் என்பது அறிந்தது.

ஆனால், அங்கு ஆட்சியாளர்களை தீர்மானிக்கும் சக்தியாக மற்றொரு சமூகத்தினரும் இருக்கின்றார்கள். கிட்டத்தட்ட மாநில மக்கள் தொகையில், 23.51% இரண்டாவது டிசைடிங் ஃபேக்டராக இருக்கிறது பட்டியலின சமூகம். வர்க்கத்தை மையமாகக் கொண்ட மாநிலத்தின் இடது ஆதிக்க அரசியலில் நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டிருக்கிறது இந்த சமூகம். அம்மாநிலத்தில் பட்டியல் சாதியினரின் முக்கியத்துவத்தை முதலில் அறிந்துகொண்டு பாஜகதான். இப்போது அவர்களை கவர பார்க்கிறது திரிணாமூல் காங்கிரஸ்.

விகிதசார அடிப்படையில் 23.51 சதவிகிதத்துடன் பட்டியலின மக்கள் அதிக அளவில் வாழும் நாட்டிலேயே மூன்றாவது மாநிலமாக விளங்குகிறது மேற்கு வங்கம். இங்கு 60 அங்கீகரிக்கப்பட்ட பட்டியலின குழுக்கள் ஒன்பதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 25%-க்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளன. மொத்தத்தில், இந்த 9 மாவட்டங்களில் 127 சட்டமன்ற இடங்கள் உள்ளன. தவிர, ஆறு மாவட்டங்களில், 78 சட்டமன்ற தொகுதிளில், 15 - 25% பட்டியலின மக்கள் வசிக்கின்றனர்.

2019 மக்களவைத் தேர்தலில், பாஜக 18 இடங்களை வென்றது. ஆனால், மாநிலத்தில் உள்ள 68 சட்டமன்ற தனி தொகுதிகளில் 33 இடங்களில் பாஜக முன்னிலை வகித்தது. இந்த 33 இடங்களில் 26 இடங்கள் மாதுவா சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர். திரிணாமூல் காங்கிரஸ் 34 இடங்களில் முன்னிலை வகித்தது. இடதுசாரிகள், காங்கிரஸ் கூட்டணி மூன்று பிரிவுகளில் மட்டுமே முன்னிலை வகித்தது.

2016 தேர்தலில் 50 தனித்தொகுதிகளை வென்ற நிலையில், பாஜகவால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை. ஆனால், அதே 2019 மக்களவைத் தேர்தலில் பட்டியலின மக்களின் வாக்குகளை குறிப்பிடத்தக்க அளவில் அறுவடை செய்துள்ளது. இதற்கு இடைப்பட்ட 3 ஆண்டுகளில் பட்டியலின மக்களின் வாக்குகள் பாஜகவுக்கு சென்றிருப்பதை உணர முடிகிறது. அதேபோலத்தான் 2011 தேர்தலில், திரிணாமூல் காங்கிரஸ் 37 பட்டியலின தொகுதிகளை வென்றது. இடதுசாரிகள் 20, காங்கிரஸ் 10 மற்றும் எஸ்.யு.சி.ஐ (கம்யூனிஸ்ட்) 1 பிடித்தன. அப்போது பாஜக ஒன்றுமே இல்லாமல் இருந்தது.

நமசுத்திரர்கள் மேற்கு வங்கத்தில் இரண்டாவது பெரிய எஸ்சி (17.4%) பிரிவு. ராஜ்பன்ஷிகளுக்கு (18.4%) சற்று கீழே உள்ளனர். சுமார் 1.5 கோடி வாக்காளர்களைக் கொண்ட நமசுத்திரர்கள் வசிக்கும் இடங்களில் பாஜக 42 இடங்களை பிடித்திருக்கிறது. மாதுவா மக்களின் ஆன்மிக குரு ஹரிச்சந்த் தாகூரின் பிறப்பிடத்தைக் குறிக்கும் கோயிலில் பிரதமர் மோடி தனது வங்கதேச பயணத்தின்போது பிரார்த்தனை செய்தார். அன்றுதான் மேற்கு வங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

மாதுவாக்களை பொறுத்தவரை கிழக்கு பாகிஸ்தான் அவர்களின் பூர்வீகம். பின்னாளில் வங்கதேசம் உருவாக்கப்பட்டதால், அங்கிருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்தனர். இருப்பினும், கணிசமான எண்ணிக்கையிலானோர் இன்னும் குடியுரிமை பெறவில்லை. பிஜேபியின் சிஏஏ வாக்குறுதி, 2019 மக்களவைத் தேர்தலில் மாதுவாஸ் சமூகம் பாஜகவுக்கு வாக்களித்தற்கான காரணமாக அமைகிறது.

மற்றொரு புறம் மம்தா பானர்ஜி அரசாங்கம், தனது பங்கிற்கு அம்மக்களுக்கு தேவையானதை செய்துள்ளது. குறிப்பாக நமசுத்திரர்களுக்கான மேம்பாட்டு வாரியங்களை அமைத்து, 244 அகதிகள் காலனிகளை ஒழுங்குபடுத்தியுள்ளது, வடக்கு 24 பர்கானாக்கள், நாடியா, தெற்கு 24 பர்கானாக்கள், கொல்கத்தா மற்றும் கூச் பெஹார் முழுவதும், அவர்களுக்கு நிலப் பட்டங்களை வழங்கியுள்ளது. தற்போதைய சட்டமன்றத் தேர்தலில், திரிணாமுல் 79 எஸ்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மொத்த தனித் தொகுதிகளை விட 11 பேர் வேட்பாளர் கூடுதலாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

யார் இந்த ஹரிச்சந்த் தாகூர்?

ஹரிச்சந்த் தாகூர் பங்களாதேஷின் ஓரகாண்டியில் 1812-ஆம் ஆண்டில் ஒரு தாகூர் எஸ்சி விவசாயி குடும்பத்தில் பிறந்தார். வைஷ்ணவ இந்துக்களாக இருந்த தாகூர், வைஷ்ணவ இந்து மதத்தின் ஒரு பிரிவை மாதுவா என்று நிறுவினார். இதை நமசூத்ரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்றுக்கொண்டனர். 'ஜகத் மாதா' சாந்தி மாதா என்பவரை மணந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். ஹரிச்சந்த் தாகூர் 1878-இல் பங்களாதேஷின் ஃபரித்பூரில் இறந்தார்.

மற்ற சமூக குழுக்கள்!

ராஜ்பன்ஷிக்கள் என்ற சமூகம் மேற்கு வங்கத்தில் பரவிக் கிடக்கிறது. மம்தா அரசு வட வங்கத்தில் ராஜ்பன்ஷிக்காக நாராயணி பட்டாலியனை அமைத்துள்ளது. முந்தைய சுதேச மாநிலமான கூச் பெஹாரின் நாராயணி சேனாவின் பெயரால் இந்த பட்டாலியன் பெயரிடப்பட்டது. அமித் ஷா இப்போது நாராயணி சேனா சிஏபிஎஃப் பட்டாலியன் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். மேற்கு வங்கத்தில் ராஜ்பன்ஷிகள், மால்டா, முர்ஷி-தபாத் குழுக்களுடன் கூச் பெஹார், ஜல்பைகுரி மற்றும் டார்ஜிலிங் ஆகிய பகுதிகளில் குவிந்துள்ளனர்.

- தகவல் உறுதுணை: The Indian Express

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com