புதுச்சேரியில் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் சரிந்தது எப்படி? - ஓர் அலசல்

புதுச்சேரியில் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் சரிந்தது எப்படி? - ஓர் அலசல்
புதுச்சேரியில் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் சரிந்தது எப்படி? - ஓர் அலசல்

யூனியன் பிரதேசமான புதுச்சேரி எப்போதும் பக்கத்து மாநிலங்களைச் சார்ந்த மக்களுக்கு ஆச்சரியங்களை அள்ளி கொடுக்கின்ற பிரதேசம். அதற்கு காரணம் பிரெஞ்சு - தமிழ் கலாசாரம் புதுச்சேரியில் இன்றளவும் நீடித்து வருவது. அழகான வீதிகள், அதனை ஒட்டிய கடற்கரை, ஆரோவில், வெளிநாடு மற்றும் உள்நாட்டு மக்கள் என திரும்புகிற திசையெங்கும் ஆச்சரியம்தான். மொழியிலும் புதுச்சேரி மக்கள் ஆச்சரியம் கொடுப்பார்கள். அவர்களது பேச்சு வழக்கில் சில பிரெஞ்சு வார்த்தைகளும் கலந்திருப்பது அதற்கு காரணம். அதேபோல புதுச்சேரி மண்ணின் அரசியலும் மாறுபட்டே இருக்கிறது. நான்கு பிராந்தியங்களை உள்ளடக்கிய புதுச்சேரியில் திராவிட கட்சிகள் ஏன் ஆதிக்கம் செலுத்த தவறின? அண்டை மாநிலமான தமிழகத்தில் அரை நூற்றாண்டுக்கு மேல் திராவிட கட்சிகள்தான் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆனால் புதுச்சேரியில் ஏன் அதை செய்ய தவறியுள்ளன? - அலசுவோம் வாருங்கள். 

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் திராவிட கட்சிகள் ஆட்சி செய்துள்ளன. இருப்பினும் அதனை தக்கவைத்துக் கொள்ள தவறிவிட்டன. அதற்கு காரணம், புதுச்சேரியில் கட்சிகளை காட்டிலும் ஆளுமை மிக்க தலைவர்களின் ஆதிக்கம் ஓங்கி இருப்பதுதான். 

“புதுச்சேரி வெளியில் இருந்து பார்ப்பதற்கு அமைதியாக இருக்கும். ஆனால், இங்கு அரசியல் உறுதித்தன்மை என்பது இல்லாமல் உள்ளது. அதனால், அது பல்வேறு பாதிப்பை கொடுக்கிறது” என புகைப்பட கலைஞர் ரத்தினம் தெரிவித்துள்ளார். 

அதேநேரத்தில் புதுச்சேரியை திராவிட கட்சிகள் மாற்றாந்தாய் மனப்பக்குவத்தில் அணுகுவதாக புதுச்சேரி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதனால்தான் திராவிட கட்சிகளால் இங்கு ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அதுவேதான் தேசிய கட்சிகள் ஆதிக்கம் செலுத்தவும் வழிவகை செய்துள்ளது என்கின்றனர். 

மக்களின் குரல் உண்மை என்பதையும் இது உணர்த்துகிறது. கடந்த காலங்களில் புதுச்சேரியில் திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் ஆட்சி அரியணையை அலங்கரித்துள்ளனர். ஆனால், படிப்படியாக அதனை இழந்து தற்போது பேரவையில் தனது பெரும்பான்மை பெருமளவு இருப்பை இரண்டு கட்சிகளும் இழந்துள்ளன. 

அதிகபட்சம் 7 முதல் 8 சீட்டுகள் வரைதான் இரண்டு திராவிட கட்சிகளும் தற்போது தேர்தலில் பெறுகின்றன. 1969 முதல் 1983 வரை இரண்டு திராவிட கட்சிகளும் புதுச்சேரியில் மாறி மாறி ஆட்சி செய்துள்ளன. பிறகு 1990 - 91 மற்றும் 1996 - 2000 வரையிலும் திமுக இரண்டு முறை ஆட்சி செய்துள்ளது. அதன் பிறகு இன்று வரை ஆட்சி அதிகாரத்தை திராவிட கட்சிகள் பிடிக்கவில்லை. 

புதுச்சேரியில் திராவிட கட்சிகள் ஆதிக்கத்தை இழக்கவும், தேசிய கட்சிகள் ஆதிக்கம் செலுத்தவும் காரணம் என்ன?

“இதற்கு ஒன்றை மட்டுமே பதிலாக சொல்ல இயலும். அரசியல் பிரமுகர்கள் தங்களது விசுவாசத்தை தங்களுக்கு ஏற்ற வகையில் வெவ்வேறு கட்சிகளுக்கு காட்டிக்கொண்டே இருப்பதுதான் காரணம்” என்கிறார் எழுத்தாளரும், பத்திரிகையாளருமான பிஎன்எஸ் பாண்டியன். 

முதலில் திராவிட கட்சிகள் புதுச்சேரியில் எப்படி ஆதிக்கம் செலுத்த தொடங்கின என்பதைப் பார்ப்போம்.

புதுச்சேரி பிரதேசம் விடுதலை பெறுவதற்கு முன்னதாகவே தங்களது மக்கள் பிரதிநிதிகளை பிரெஞ்சு நாடாளுமன்றத்திற்கு அனுப்ப தொடங்கியது. வழக்கறிஞர் பொன்னுத்தம்பி பிள்ளையின் முயற்சியினால் பிரெஞ்சு புதுச்சேரி குடியுரிமை பெற்ற மக்களுக்கு வாக்குரிமை சாத்தியமானது என்கிறார் அரசியல் விமர்சகரான சிவ இளங்கோ. 

“அப்படித்தான் புதுச்சேரியை சார்ந்த மக்கள் அரசியலில் நுழைய தொடங்கினர். அவர்களில் ஒருவர்தான் மூன்று தசாப்தங்களாக அரசியலில் ஆதிக்கம் செலுத்திய சண்முக வேலாயுத முதலியார். அவருக்கு இருந்த அதிகாரத்தின் மூலம் பிரெஞ்சு ஆளுநர்களையே பணி மாறுதல் செய்ய வைத்துள்ளார். அவர் நடு முதலியார் கட்சி என்பதையும் நடத்தினார். 

பெரும்பாலும் புதுச்சேரியில் தனிநபர்களுக்கு மக்களிடையே இருக்கும் செல்வாக்குதான் வாக்குகளாக மாறும். அது அப்போது முதல் இப்போது வரை தொடர்கிறது. 

அதன்மூலம் இந்த மண்ணில் பல கட்சிகள் உருவாகி உள்ளன. கேபெலே கட்சி (Gaebele), பிரெஞ்சு இந்து கட்சி, டேவிட் கட்சி, செல்வராஜ் செட்டியார் கட்சி, செல்லான் நாயக்கர் கட்சி, சுப்பையா கட்சி, குபேர் கட்சி என அந்தந்த கட்சிகளின் தலைவர்கள் தங்களுக்கு உள்ள வசீகரத்தைக் கொண்டு மக்களை கவர்ந்து, அதன்மூலம் அரசியல் ஆதாயம் பெற்றனர். பின்னாளில் அதுவே அவர்களது வீழ்ச்சிக்கும் வித்திட்டுள்ளது” என்கிறார் அவர். 

அந்த தலைவர்களுக்குப் பிறகு இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லாததால், அந்தக் கட்சிகள் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை எனவும் தெரிகிறது. 

பின்னர் பிரெஞ்சு ஆட்சிக்கு எதிராக புதுச்சேரியில் சுதந்திர போராட்டமானது 1936 வாக்கில் வெடித்தது. சுப்பையா தலைமையிலான மக்கள் முன்னணி விடுதலைக்காக முன்னின்று போராடியது. 1947-இல் இந்தியா விடுதலை பெற்றதும் புதுச்சேரியில் போராட்டம் தீவிரமடைந்தது. அதன் பலனாக 1954-இல் புதுச்சேரி சுதந்திரம் பெற்றது. பின்னர் 1955-இல் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 39 தொகுதிகளுக்கு அப்போது தேர்தல் நடந்தன. அந்தத் தேர்தலில் புதுச்சேரி மக்களும், பிரெஞ்சு குடிமக்களும் வாக்களித்தனர். மக்கள் முன்னணி 21 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும், ஒரு இடத்தில் சுயேச்சையும் வெற்றி பெற்றனர். 

காங்கிரஸுக்கு ஆதரவு கொடுத்தவர்கள் நிலக்கீழார்களாகவும், மக்கள் முன்னணிக்கு ஆதரவு கொடுத்தவர்கள் தொழிலாளர்களாகவும் இருந்தனர். பிறகு புதுச்சேரி பிரெஞ்சு அரசாங்கத்தின் கீழ் இயங்குவதா அல்லது இந்தியாவுடன் இணைவதா என்ற வாக்கெடுப்பில் இந்தியாவுடன் இணைவதாக உறுதியானது. அப்போது மக்கள் முன்னணியில் இருந்த உறுப்பினர்கள் சிலர் காங்கிரஸ் கட்சிக்கு தாவியுள்ளனர். அதற்கு காரணம், அப்போதைய பிரதமர் நேருவின் ஆளுமை என சொல்லப்படுகிறது. காமரஜரும் இந்த விஷயத்தில் தலையிட்டதாக தெரிகிறது. இங்கு பழிவாங்கும் மற்றும் அதிருப்தி அரசியலுக்கு பஞ்சமில்லை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

பின்னர் 1963-இல் நிறுவப்பட்ட புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டத்தின் மூலமாக புதுச்சேரியில் சட்டப்பேரவை அமைக்கப்பட்டது. புதுச்சேரியின் முதல் முதல்வராக குபேர் தேர்வானார். பின்னர் 1964 தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. வெங்கடசுப்பா ரெட்டியார் முதல்வரானார். அவரது மகன்தான் புதுச்சேரியின் முன்னாள் முதல்வரும், இந்நாள் மக்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம். 

திராவிட கட்சிகள் ஆட்சியில்... 

யாருக்கு அதிகாரம் என எழுந்த அதிகாரப் போரினால் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்தது. பின்னர் நடைபெற்ற 1969 தேர்தலில் பாரூக் மரைக்காயர் முதல்வராக ஆட்சி அமைத்தார். அது திமுக ஆட்சி என்பது குறிப்பிடத்தக்கது. 

திராவிட முன்னேற்ற கழகம் 1949-இல் முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரையால் நிறுவப்பட்டது. இருந்த போதிலும் புதுச்சேரி பிராந்தியத்தில் திராவிட சித்தாந்தங்கள் எடுபடாது என அவர் திட்டவட்டமாக சொல்லி விட்ட காரணத்தினால் திமுக உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடாமல் இருந்தனர். இந்நிலையில், 1967-இல் திமுக ஆட்சி அமைந்ததும் அண்ணாதுரை முதல்வரானார். இரண்டு ஆண்டுகளில் அவர் மறைந்த பிறகு 1969-இல் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி தலைமையிலான திமுக புதுச்சேரி தேர்தலில், குபேர் உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் 30 தொகுதிகளில் 15 சீட்டுகளை பெற்றது திமுக. 

“இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழகம் மட்டுமல்லாது, புதுச்சேரியிலும் எதிரொலித்தது. அதுவே அந்தக் கட்சி ஆட்சி அமைக்கவும் உதவியது” என்கிறார் பாண்டியன். 

தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்த பாரூக், திமுக கட்சியில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னாளில் அதுவே புதுச்சேரி அரசியலில் டிரெண்ட் ஆனது. 

பின்னர் 1972-இல் எம். ஜி. ஆர் அதிமுக கட்சியை நிறுவினார். 1974-இல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக புதுச்சேரியில் 12 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இருப்பினும் பட்ஜெட் தாக்கல் குறித்த விவரங்கள் முன்கூட்டியே கசிந்ததால் அந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளான அந்த கட்சி ஆட்சியை இழந்தது. தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது. 

பின்னர் 1977-இல் அதிமுக தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. அதோடு சேர்ந்து புதுச்சேரியிலும் 14 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 

“எம். ஜி.ஆரின் நட்சத்திர அந்தஸ்து தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் அதிமுகவிற்கு பலன் அளித்தது. இரண்டு பகுதிகளிலும் ஒரே மொழி மற்றும் ஒரே கலாசாரம் பின்பற்றப்பட்டது, அதற்கு காரணம்” என்கிறார் இளங்கோ. 

தொடர்ந்து 1978-இல் புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்கும் பேச்சுகள் எழுந்தன. அதற்கு அப்போதைய பாரத பிரதமர் மொராஜி தேசாயும் ஆதரவளித்தார். அப்போதைய தமிழக முதல்வர் எம். ஜி.ஆரும் இந்த விவகாரத்தில் ஆர்வம் காட்டியதாக தெரிகிறது. அதையடுத்து, புதுச்சேரி யூனியன் பிரதேச தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. அதோடு அதிமுக அரசும் புதுச்சேரியில் கலைக்கப்பட்டது. பின்னர் தொடர் போராட்டங்கள் வெடித்தன. அந்தப் போராட்டதை புதுச்சேரியின் இரண்டாவது சுதந்திர போராட்டம் என சொல்கின்றனர் உள்ளூர் மக்கள். 

தொடர்ந்து 1979 குடியரசு தினத்தை ‘துக்க நாள்’ என சொல்லி போராட்டம் நடைபெற்றது. ஊரடங்கு உத்தரவையும் மீறி நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் வெடித்த வன்முறையில் 13 பேர் இறந்ததாக தெரிகிறது. இருப்பினும் அரசு பதிவேட்டில் 2 பேர் மட்டுமே இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பிறகு பிரதமர் தேசாய் அந்த முடிவை கைவிட்டுள்ளார்.

சரிவு... 

பின்னர் 1980-இல் திமுக ஆட்சி அமைத்துள்ளது. எம்.ஜி.ஆரின் மறைவு புதுச்சேரியில் அதிமுக ஆட்சி அமைக்க முடியாத சூழலில் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் திமுக 1990 மற்றும் 1996 தேர்தல்களில் வெற்றி பெற்று புதுச்சேரியில் ஆட்சி அமைத்துள்ளது. 

“புதுச்சேரியில் மக்களை கவர்ந்திழுக்கும் ஆளுமை கொண்ட அரசியல் தலைவர்கள் திமுகவில் இல்லாமல் போனதால் 90களுக்கு பிறகு அந்தக் கட்சியால் ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்ககு காரணமாக அமைந்தது. அது புதுச்சேரியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க அடித்தளமாக அமைந்தது” என விவரிக்கிறார் இளங்கோ. 

பின்னர் மண்ணின் மைந்தனான புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் கடந்த 2011-இல் நிறுவிய என். ஆர்.காங்கிரஸ் (நமது ராஜ்ஜியம் காங்கிரஸ்) கட்சி, காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக உருவெடுத்தது. அதோடு 2011 தேர்தலில் வெற்றி பெற்று அந்த கட்சி ஆட்சியும் அமைத்தது. ரங்கசாமி முதல்வராக பணியாற்றினார். 

2016 தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. எதிர்வரும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடர்கிறது. என். ஆர். காங்கிரஸ் கட்சி, பாஜக மற்றும் அதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இப்படித்தான் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக மற்றும் அதிமுக என இரண்டு திராவிட கட்சிகளும் தங்களது பெரும்பான்மையை புதுச்சேரியில் இழந்துள்ளன.  

கட்டுரை உறுதுணை: The Federal

தமிழில்: எல்லுச்சாமி கார்த்திக்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com