‘எல்.முருகன், கயல்விழி, கலாராணி, ரஞ்சிதா...’ - தாராபுரத்தை தட்டிப்பறிக்கப் போவது யார்?

‘எல்.முருகன், கயல்விழி, கலாராணி, ரஞ்சிதா...’ - தாராபுரத்தை தட்டிப்பறிக்கப் போவது யார்?
‘எல்.முருகன், கயல்விழி, கலாராணி, ரஞ்சிதா...’ - தாராபுரத்தை தட்டிப்பறிக்கப் போவது யார்?

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனித்தொகுதியில், பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் போட்டியிடுவதால் களம் கடுமையான சவால்களுடன் காட்சியளிக்கிறது. இதற்காக கட்சிகள் வியூகங்களை வகுத்து வாக்கு சேகரித்து வருகின்றன.

தாராபுரம் தனி தொகுதியில் , அதிமுக கூட்டணி சார்பில் பா.ஜ.க வின் மாநில தலைவர் எல். முருகன் போட்டியிடுகிறார். திமுக சார்பில் கயல்விழி செல்வராஜ், அமமுக சார்பில் கலாராணி, மக்கள் நீதி மய்யம் சார்பில் சார்லி, நாம் தமிழர் சார்பில் ரஞ்சிதா ஆகியோர் களத்தில் உள்ளனர்.

தாராபுரம் தொகுதியில் 2016 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காளிமுத்து என்பவர் வெற்றி பெற்றுள்ளதால் இந்த முறை எப்படியேனும் தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்று பாஜகவினரும், கூட்டணியான அதிமுகவினரும் தீவிரம் காட்டுகிறார்கள். வாக்கு சேகரிப்பின் போது தெலுங்கில் பேசி வாக்குகளை சேகரிக்கும் வியூகத்தை மேற்கொள்கிறார் முருகன். வாக்கு சேகரிக்கும் வேலையோடு, கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் வேலையையும் சேர்த்து செய்கிறார் முருகன். மத்தியில் பா.ஜ.க ஆட்சி இருப்பதால கொடுக்கும் வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்பது இவரின் வாக்குறுதி. தொகுதியில் பிரதமர் பங்கேற்கும் பரப்புரை கூட்டம், புதிய வாக்காளர்களை கவர சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்புரை மேற்கொள்ள தனியாக ஒரு அணி என முருகன் வெற்றி வியூகத்தை முன்னெடுத்துள்ளார்.

திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள கயல்விழி செல்வராஜ், இதே தொகுதியை சேர்ந்தவர் என்பது ஒரு பிளஸ். அதை கூறியே வாக்கு சேகரிக்கும் இவர், முதல்முறை வேட்பாளர் என்பதால் உற்சாகம் காட்டிவருகிறார். மதவாதம் மற்றும் பொருளாதார பிரச்னைகளை சுட்டிக்காட்டி தனது வாக்கு சேகரிப்பு வியூகத்தை அமைத்துள்ளார் கயல்விழி.

தாராபுரம் தொகுதியை பூர்விகமாக கொண்ட கலாராணி, அமமுக சார்பாக களத்தில் இருக்கிறார். இவர் முன்னர் அதிமுகவில் இருந்தவர் என்பதால் அக்கட்சியில் உள்ளவர்களுடன் அறிமுகம் உள்ளவர். பெண்களை குறிவைத்து இவர் வாக்கு சேகரிக்கிறார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் சார்லி, கமல்ஹாசன் என்ற ஒற்றை பிம்பத்தை முன்னிறுத்தி பரப்புரை செய்கிறார். ஊழலற்ற ஆட்சி என்ற முழக்கத்தை பரப்புரைகளில் முன்னிறுத்தும் சார்லி, படித்தவர்களின் வாக்குகள், முதல்முறை வாக்காளர்களை இலக்காக கொண்டு வாக்கு சேகரிக்கிறார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளரான ரஞ்சிதா. தற்போதும் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். பெரும் கூட்டமாக சென்று பரப்புரையில் ஈடுபடாவிட்டாலும், கட்சியினரை சேர்த்துக்கொண்டு ஒவ்வொரு பகுதியாக சென்று வாக்கு கேட்டு வருகிறார்.

எல்.முருகன் போட்டியிடுவதால் நட்சத்திர தொகுதியாக கவனிக்கப்படும் இத்தொகுதியில் வியூகங்களை வெற்றியாக மாற்றப்போவது யார் என்று பார்க்கலாம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com