எம்.ஆர்.விஜயபாஸ்கர் Vs செந்தில் பாலாஜி - கரூர் தொகுதியில் பரப்புரை வியூகம் எப்படி?

எம்.ஆர்.விஜயபாஸ்கர் Vs செந்தில் பாலாஜி - கரூர் தொகுதியில் பரப்புரை வியூகம் எப்படி?
எம்.ஆர்.விஜயபாஸ்கர் Vs செந்தில் பாலாஜி - கரூர் தொகுதியில் பரப்புரை வியூகம் எப்படி?

இப்போதைய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் நேருக்கு நேர் மோதும் நட்சத்திர தொகுதியான கரூரில் பரப்புரை அனல் பறக்கிறது. வெற்றியை வசப்படுத்த அங்கு கட்சிகள் மேற்கொண்டு வரும் வியூகங்கள் குறித்து பார்க்கலாம்.

கரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தேமுதிக சார்பில் கஸ்தூரி என்.தங்கராஜ், நாம் தமிழர் சார்பில் எலும்பு முறிவு மருத்துவர் கருப்பையா, மக்கள் நீதி மய்யம் சார்பில் மோகன்ராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கரூர் தொகுதியை பொறுத்தவரை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், செந்தில் பாலாஜிக்கு இடையே நடைபெறும் போட்டா போட்டி பரப்புரை தான் ஹைலைட். திமுக ஆட்சிக்கு வந்தால் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் மணல் அள்ளலாம், அவர்களை தடுக்கும் அதிகாரி அங்கு இருக்கவே முடியாது என செந்தில் பாலாஜி அதிரடியாக பேசினார்.

செந்தில்பாலாஜி பேசிய வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட அதிமுவினர் ஆட்சியில் இல்லாதபோதே இப்படி என்றால், ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்று கேள்வி எழுப்பினர். மேலும் செந்தில் பாலாஜி அதிகாரிகளை மிரட்டுகிறார் என மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி மீது கரூர் நகர காவல் நிலையத்தில் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு இரவு அதிமுக - திமுக இடையே மோதல் ஏற்பட்டது. திமுக வன்முறையை கட்டவிழ்த்துவிட்டதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றஞ்சாட்ட, அடுத்த நாள் திமுக நிர்வாகி ஒருவரை அதிமுகவினர் தாக்கும் வீடியோவை செந்தில் பாலாஜி வெளியிட்டார்.

இவை ஒரு புறம் இருக்க, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீதிகளில் நடந்தே சென்று வாக்கு சேகரிக்கிறார். அவர் திமுகவில் சீட் கிடைக்காத முன்னாள் அமைச்சர் சின்னசாமி, முன்னாள் எம்எல்ஏ காமராஜ் ஆகிய இருவரையும் அதிமுகவில் இணைத்து கொண்டும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியும் நடந்தே ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று வாக்கு கேட்கிறார். திமுக தரப்பில் 20 வாக்காளர்களுக்கு ஒரு நிர்வாகி நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நிர்வாகிகள் தொடர்ச்சியாக தங்களுக்கான 20 பேரை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர்.

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜ் டார்ச் லைட்டை கையில் ஏந்தியவாறு ஒரு நாள் நடந்து சென்றும், மற்றொரு நாள் பிரசார வாகனத்தில் வேகமாகவும் தொகுதியில் வலம் வருகிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா பிரச்சார வாகனத்தில் தொகுதியில் சுற்றி வருவதை காண முடிகிறது.

தேமுதிக வேட்பாளர் கஸ்தூரி தங்ராஜ், வீடுகளுக்கு சென்று வாக்கு கேட்காமல் கடைவீதி, டீ கடை, ஓட்டல் என கும்பல் இருக்குமிடத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com