“ஆப்பிள் ஐ போன், நிலாவுக்கு சுற்றுலா” - தேர்தல் அறிக்கையால் மிரளவைத்த சுயேச்சை வேட்பாளர்!

“ஆப்பிள் ஐ போன், நிலாவுக்கு சுற்றுலா” - தேர்தல் அறிக்கையால் மிரளவைத்த சுயேச்சை வேட்பாளர்!
“ஆப்பிள் ஐ போன், நிலாவுக்கு சுற்றுலா” - தேர்தல் அறிக்கையால் மிரளவைத்த சுயேச்சை வேட்பாளர்!

செயற்கை கடல் அமைப்பது, விண்வெளிக்கு தொகுதி மக்களை அழைத்து செல்வது என எந்த அரசியல் கட்சியும் நினைத்துக்கூட பார்க்க முடியாத திட்டங்களை கொண்ட சுயேச்சை வேட்பாளரின் தேர்தல் அறிக்கைதான் மதுரை மாவட்டத்தில் தற்போதைய மிரட்சியான டாக். அவரது தேர்தல் அறிக்கைதான் சமூக வலைதளங்களிலும் வைரல் கண்டெண்ட்.

இதுவோ தேர்தல் காலம். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தொடங்கி லெட்டர் பேட் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வரை ‘நான் எம். எல். ஏவாக தேரவானால்’, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால்’ என சொல்லி வாக்குறுதிகளை அள்ளி வீசுவது வழக்கம். அந்த வகையில் அசரடிக்கும் வாக்குறுதிகளால் வாக்காளர்களை கவர முயற்சி செய்துள்ளார் மதுரை தெற்கு தொகுதி சுயேட்சை வேட்பாளர் சரவணன். இவரை ஊருக்குள் ‘துலாம்’ சரவணன் என சொன்னால் தான் தெரிகிறது. துலாம் சரவணன் மதுரை அனுப்பானடியில் வசித்து வருகிறார். 10ஆம் வகுப்பு வரை படித்தவர், மார்க்கெட்டிங், உள்ளூர் செய்தித்தாள் நிருபர் என பல தொழில்களை செய்தவர். 33 வயதான அவர் மதுரை தெற்கு தொகுதியில் ‘குப்பைத்தொட்டி’ சின்னதில் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.சரவணனும், திமுக கூட்டணி சார்பில் மதிமுகவின் பூமிநாதன் ஆகியோரும் களம் காண்கின்றனர். எதிர்வரும் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் ‘இதை செய்வேன், அதை செய்வேன்’ என அதிசயமிக்க தேர்தல் வாக்குறுதிகளை அவர் அள்ளி வீசியுள்ளார். தற்போது, இவர் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை தான் அரசியல் வட்டாரத்தில் நகைச்சுவையாக அமைந்துள்ளது.

தொகுதி மக்கள் அனைவருக்கும் ஐபோன், நீச்சல் குள வசதியுடன் 3 மாடி வீடு, வீட்டிற்க்கு தலா ஒரு கார், ஒரு ஹெலிகாப்டர், ஒரு படகு வழங்கப்படும் என்றும், 100 நாள் பயணமாக நிலவுக்கு சுற்றுலா, தொகுதி சில்லாக இருக்க 300 அடி உயரத்தில் செயற்கை பனிமலை, இயற்கை கடல் அமைக்கப்படும் தொகுதியில் விண்வெளி ஆராய்ச்சி மையம், ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர, பெண்களின் திருமணத்திற்கு 100 சவரன் நகை, இல்லத்தரசிகளுக்கு வீட்டு வேலை செய்ய ரோபோ வழங்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் இந்த தேர்தல் அறிக்கை வைரலாக பரவிவரும் நிலையில், இப்படி ஒரு தேர்தல் அறிக்கையை கொடுத்த அந்த கொடை வள்ளல் மனம் கொண்ட வேட்பாளர் அளித்த பதில்கள் நம்மை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

தேர்தலில் எப்படி போட்டியிடுவது என்பது பலருக்கும் தெரியவில்லை. எனவே, எப்படி போட்டியிடுவது என்பதை தெரிந்து கொள்ளவே சுயேச்சையாக போட்டியிடுவதாக தெரிவித்த அவர் இதை மற்ற இளைஞர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். அதுவே, அரசியல்வாதிகளுக்கு பயத்தை அளிக்கும். அந்த பயமே நேர்மையான அரசியலுக்கு வழி வகுக்கும் என தெரிவித்தார். தேர்தல் செலவுகளுக்கு கூட 20,000 ரூபாய் தவணைக்கு கடன் வாங்கி அதில் 10 ஆயிரம் ரூபாய் வேட்புமனுவிற்கு டெபாசிட் கட்டியுள்ளதாக கூறுகிறார்.

"கடந்த 50 ஆண்டுகளாக அரசியல் கட்சிகள் பல இலவச திட்டங்களை அறிவித்து, ஆட்சியில் அமர்ந்து உள்ளார்கள். ஆனால், மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.
இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகத்தில் எந்த அரசியல் கட்சியும் செய்யாத அறிவிப்பை செய்துள்ளேன்.
வழக்கமான தேர்தல் அறிவிப்புகளாக இருந்தால் மக்கள் திரும்பி பார்க்க மாட்டார்கள். கடல் உருவாக்குவேன், விண்வெளி ஆராய்ச்சி மையம் கொண்டு வருவேன் என்று சொன்னால் மக்கள் திரும்பி பார்ப்பார்கள் என இப்படிப்பட்ட தேர்தல் அறிக்கையை கொடுத்ததாகவும் தான் வெற்றி பெற்றால் சாத்தியக்கூறுகள் உள்ள சில திட்டங்களை நிறைவேற்றுவதாக வெள்ளந்தியாக கூறுகிறார்.

இந்த திட்டங்களை பார்த்து அதிர்ச்சியடைந்ததாக கூறும் தொகுதி மக்கள் தங்களை சிந்திக்க செய்துள்ளதாகவும் இவரின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது எனவும் இளைஞரின் விழிப்புணர்வு முயற்சியை பாராட்டுகிறார்கள்.

தேர்தல் நேரத்தில் மக்களை கவர பல்வேறு திட்டங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகள் பின்னர் அதனை செயலப்படுத்துகிறதா என்பதை சிந்திக்கவும் இலவச திட்டங்கள் மூலம் மக்கள் ஏமாற்றப்படுக்கிறார்களா என்பதையும் யோசிக்க வைத்துள்ளார் இந்த இளைஞர்.

அதில் குறிப்பிடத்தக்கவை.. 

*மக்கள் அனைவருக்கும் ஆப்பிள் ஐ போன் வழங்கப்படும். 

*அனைவருக்கும் நீச்சல் குளம் வசதியுடன் கூடிய 3 மாடி வீடு கட்டித்தரப்படும். 

*ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடம் ஒரு கோடி ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

*அனைத்து வீடுகளுக்கும் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் வழங்கப்படும்.

*ஒவ்வொரு வீட்டிற்கு சிறிய வகை ஹெலிகாப்டர் வழங்கப்படும். 

*இல்லத்தரசிகளுக்கு வேலை செய்ய ரோபோ வழங்கப்படும்.

*பெண்களின் திருமணதிற்கு 100 சவரன் தங்க நகை வழங்கப்படும்.

இப்படி 15கக்கும் மேற்பட்ட நம்ப முடியாத  வாக்குறுதிகளை அவர் வழங்கி உள்ளது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. 

- கணேஷ்குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com