வீதிகளில் குப்பைகளை குவிப்பதிலும் போட்டி: தேர்தல் களத்தில் கலங்கும் தூய்மைப் பணியாளர்கள்!

வீதிகளில் குப்பைகளை குவிப்பதிலும் போட்டி: தேர்தல் களத்தில் கலங்கும் தூய்மைப் பணியாளர்கள்!
வீதிகளில் குப்பைகளை குவிப்பதிலும் போட்டி: தேர்தல் களத்தில் கலங்கும் தூய்மைப் பணியாளர்கள்!

தேர்தல் களத்தில் மட்டுமின்றி வீதிகளில் குப்பைகளைக் குவிப்பதிலும் கட்சிகள் போட்டா போட்டி போடுவதன் எதிரொலியாக, தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். 

தேர்தல் காலகட்டம் தொடங்கி விட்டாலே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி முதல் புதிதாக முளைத்த சிறிய கட்சிகள் வரை அனைவரும் மக்களைத் தேடி வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பு, தொழில் நடைபெறும் இடங்கள், பேருந்துகள், கடைகள் என எங்கும் தேர்தல் பரப்புரைகளே தென்படுகிறது. போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளை பகுதி வாரியாக பிரித்து திட்டமிட்டு, வீதி வீதியாக வாக்கு சேகரிக்கின்றனர். அப்படி வாக்கு சேகரிக்க செல்லும் வேட்பாளர்கள் தங்களின் தேர்தல் அறிக்கை, சின்னம், தொகுதிக்கான திட்டங்கள் அடங்கிய நோட்டீஸ்களை வாக்காளர்களிடம் வழங்கி வாக்கு கேட்கிறார்கள். மேலும் சுவரொட்டிகள், கொடிகள், பதாகைகள் ஆகியவையும் வேட்பாளர்களின் பிரசாரத்தில் முக்கிய இடம் பிடிக்கிறது.

இதுவே ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சி சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர்களாகவோ, வசதி படைத்த வேட்பாளர்களோ இருந்தால் மேள தாளங்கள் முழங்க ஆரவாரத்தோடு வாக்கு சேகரிக்கின்றனர். அப்படி சேகரிக்கும் வேட்பாளர்களுக்கு தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து, மாலை தூவி வரவேற்கின்றனர். இவ்வாறு ஆளும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களும், திமுக கூட்டணி வேட்பாளர்களும் வாக்கு சேகரிக்கும் பகுதிகளில் மாலை, பட்டாசு, பிளாஸ்டிக் கொடிகள், நோட்டீஸ் போன்ற குப்பைகளை தெருக்கள் சாலைகளில் பரவலாக காணப்படுகிறது. தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் என்றால், சொல்லவே தேவையில்லை.

சென்னையைப் பொறுத்தவரையில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் தங்களை பலமாக காட்டிக்கொள்ள போட்டி போட்டுக் கொண்டு வாக்கு சேகரிப்பின்போது தொண்டர்கள் கூட்டத்தை அதிகமாக சேர்கின்றனர். இதனால் இயல்பாகவே பூ, மாலைகள், பட்டாசு, கட்சி நோட்டிஸ், கொடிகள் குப்பைகளாக வீதியில் கிடக்கிறது. எனவே, தேர்தல் நேரங்களில் தங்களுக்கு இரண்டு மடங்கு வேலை இருப்பதாக தூய்மை பணியாளர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து அதிகாலையில் ஜாபர்கான்பேட்டை பகுதியில் சுத்தம் செய்து கொண்டிருந்த ராம லட்சுமி என்கிற தூய்மைப் பணியாளரிடம் பேசியபோது, "பொதுவாக தேர்தல் நேரங்களில் வேலை அதிகமாக இருக்கிறது. பிரபல வேட்பாளர் அந்தப் பகுதியில் பிரசாரத்திற்கு வந்தாலே இயல்பான வேலையை விட அதிக வேலை எடுக்கும். அதிகமாக பட்டாசு, மாலைகளின் குப்பைகளை அள்ளுகிறோம். தேர்தல் நேரத்தில் தூய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.

அதேநேரத்தில் ஒப்பந்த பணியாற்றும் எங்களுக்கு பணி உத்தரவாதம், ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கட்சிகள் வித விதமாக தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டாலும், அதில் தூய்மைப் பணியாளர்களுக்கு என பெரிய அளவில் அறிவிப்புகள் இடம்பெறுவதில்லை. சாதாரண நாள்களை விட தேர்தல் நேரத்தில் வேலை அதிகமாக செய்கிறோம். ஆனால், அதற்கான பிரதிபலன்களை பெறாமல் தவிர்க்கப்படுகிறோம்" என்று வேதனையுடன் தெரிவித்தார் ராம லட்சுமி.

தேர்தல் காலத்தில் தூய்மை பணியாளர்களின் உணர்வுகளுக்கும், உழைப்பிற்கும் மதிப்பு கொடுத்து தேர்தல் ஆணையம் உத்தரவோடு மாநகராட்சி சார்பில் தேர்தல் கால சிறப்புப் படி கொடுப்பதுதான் இதற்கான தீர்வாக அமையும்.

- ந.பால வெற்றிவேல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com