வாணியம்பாடியில் சுயேச்சையாக களம் காணும் போண்டா மாஸ்டர்!

வாணியம்பாடியில் சுயேச்சையாக களம் காணும் போண்டா மாஸ்டர்!
வாணியம்பாடியில் சுயேச்சையாக களம் காணும் போண்டா மாஸ்டர்!

சாலையோர போண்டா கடை வைத்திருக்கும் அப்துல் வாகித், வாணியம்பாடி தொகுதியில் சுயேச்சையாக களமிறிங்கி கவனம் ஈர்த்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காதர்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் அப்துல் வாகித். இவர் காதர்பேட்டை பள்ளிவாசல் அருகில் சாலையோரத்தில் கடந்த 40 ஆண்டு காலமாக போண்டா, வடை சமைத்து விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
இவர் வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2011-ஆம் ஆண்டில் சுயேச்சையாக போட்டியிட்டவர். இப்போதும் மீண்டும் 2021 தேர்தலில் அதே தொகுதியில் சுயேச்சையாக களம் காண்கிறார்.

தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளில் சினிமா துறையினரும், தொழிலதிபர்களும், வழக்கறிஞர்களும், மருத்துவர்களும் போட்டி போட்டுக் கொண்டு பிரமாண்ட அணிவகுப்புடன் வேட்புமனுவை தாக்கல் செய்வது வழக்கம். உள்ளூரில் செல்வாக்கு மிக்க சிலரும் இப்படிச் செய்வதுண்டு. ஆனால், அப்துல் வாகித் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தனது வேட்பு மனுவை வாணியம்பாடி தேர்தல் நடத்தும் அலுவலரும், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியருமான காயத்ரி சுப்பிரமணியத்திடம் தாக்கல் செய்தார்.

எளிமையாக லுங்கி அணிந்து கொண்டு, முன்மொழிய ஒருவரும், வழிமொழிய இன்னொருவரையும் மட்டும் அழைத்துக் கொண்டு வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த அப்துல் வாகித்தை அங்கே இருந்தவர்கள் வியப்புடன் பார்த்தனர்.

வேட்பாளர்கள் பலரது சொத்து மதிப்பு பல கோடிகளில் இருக்க, அப்துல் வாகித்துக்கோ பாழடைந்த வீடு ஒன்று மட்டுமே இருக்கிறது. அதை தனது வேட்பு மனுவில் தெரிவித்திருக்கிறார். வங்கி இருப்புகள் ஏதுமில்லாமல் இருப்பதாக பதிவு செய்துள்ளார். தேர்தல் பிரசாரத்திலும் தீவிரம் காட்டப்போவதாக தெரிவித்துள்ளார்.

தேர்தல் களத்தில் நிற்பதற்கான காரணத்தை வினவியபோது, அவர் அளித்த பதில்:

"மக்களுக்கு சேவை செய்யணும்."

- ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com