ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் தமிழக அரசியலில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்கள்!

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் தமிழக அரசியலில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்கள்!
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் தமிழக அரசியலில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்கள்!

''ஜெ. ஜெயலலிதா எனும் நான்.'' என்ற கம்பீர குரலோசை காற்றில் கரைந்து 4 ஆண்டுகள் கடந்துவிட்டது. அவரது மறைவுக்கு பின் தமிழக அரசியல் களத்தில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் குறித்து பார்ப்போம்.

தன்னுடைய அரசியல் வாழ்வில் பல்வேறு சரிவுகளையும், சங்கடங்களையும் அவ்வப்போது சந்தித்திருந்தாலும், இந்திய அரசியல் வானிலும், தமிழக அரசியல் களத்திலும் தவிர்க்க முடியாத சக்தியாக 36 ஆண்டுகாலம் வீறுநடைபோட்டவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.

இன்றைக்கும் ‘ஜெயலலிதா மட்டும் இருந்திருந்தால்’ என்ற கேள்வி தமிழக மக்கள் மனதில் அவ்வப்போது எழுந்துகொண்டிருக்கிறது. அவரது மறைவுக்குப்பின் அதிமுக மட்டுமல்ல; தமிழக அரசியல் களமும் பல்வேறு மாற்றங்களை காணத் தொடங்கியது. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவியேற்ற 3 மாதங்களுக்குள்ளே உட்கட்சி பிரச்னை கிளம்பியதால் பதவியை ராஜினாமா செய்தார்.

சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனபின்னர், தமிழக முதல்வராக தயாரான போது, ஓபிஎஸ் தலைமையில் அதிமுக உடைந்தது. சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைசென்றார். அப்போது யாருமே எதிர்பாராத வகையில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார் சசிகலா, தினகரன் துணைப்பொதுசெயலாளர் ஆனார். பின்னர் ஆர்.கே.நகர் தேர்தல், தினகரன் கட்சியிலிருந்து நீக்கம் என ஒருவழியாக இரண்டாக உடைந்த அதிமுக, மீண்டும் ஒன்றாகி தொடர்ந்து ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைந்து கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தி கொண்டிருக்கின்றனர்.

இதுஒருபுறம் இருக்க, அரசியலில் தமக்கு நாட்டமில்லை என்பதை திரைப்படங்கள் மூலம் சொல்லிவந்த கமல்ஹாசன், திடீரென்று 2018ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தினகரன் தலைமையில் போர்கொடி தூக்கிய 18 எம்.எல்.ஏக்கள் பதவி இழப்பு ஒருபுறம் நிகழ, 2018ம் ஆண்டு டிடிவி தினகரனும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனி கட்சியைத் தொடங்கினார். 2018ம் ஆண்டு ஆகஸ்ட 7ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவிற்கு பின் எந்தவித சலசலப்பும் இல்லாமல் மு.க.ஸ்டாலின் திமுக தலைவரானார்.

கால் நூற்றாண்டுகாலமாக அரசியலுக்கு வருவார் என்று ஒவ்வொரு தேர்தலுக்கும் காத்திருந்த தன்னுடைய தொண்டர்களிடம் அரசியலுக்கு நிச்சயமாக வருவேன் என்று நம்பிக்கையூட்டினார் நடிகர் ரஜினிகாந்த். வரும் ஜனவரி மாதம் புதிய கட்சி தொடங்கி தேர்தலை சந்திப்பதாக முடிவு எடுத்து அதை ஊடகங்கள் வாயிலாக உறுதியோடு தெரிவித்த அவர், கடைசியில் இம்முறையும் பெரும் ஏமாற்றத்தை அளித்துவிட்டு, நிரந்தரமாக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

மோடியா, லேடியா என்று கேள்வி கேட்ட ஜெயலலிதாவின் கட்சி பாஜகவுடன் 2019 கூட்டணி வைத்து, தமிழகத்தில் ஒரு நாடாளுமன்ற தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது. வரும் 2021 தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்த அதிமுக, எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைதண்டனை அனுபவித்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஜனவரி 27 இல் விடுதலையானார். சசிகலா விடுதலையான பின் அதிமுகவிலும், தமிழக அரசியல் களத்திலும் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

சில பல காட்சிகளுக்குப் பிறகு, அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்தார்.

ஜெயலலிதா மறைந்த கடந்த 4 ஆண்டுகளில் இப்படி பல்வேறு மாற்றங்களை கண்ட தமிழக அரசியல் களம், 2021 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற பொதுத்தேர்லை பல்வேறு மாற்றங்களோடும், புதிய கட்சிகளோடும் சந்திக்க இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com