தலைவர்களின் 'சிறப்பு' பிரசார வாகனங்கள் தயாராவது எப்படி தெரியுமா?

தலைவர்களின் 'சிறப்பு' பிரசார வாகனங்கள் தயாராவது எப்படி தெரியுமா?
தலைவர்களின் 'சிறப்பு' பிரசார வாகனங்கள் தயாராவது எப்படி தெரியுமா?

தேர்தல் என்றாலே எல்லோருக்கும் சட்டென நினைவுக்கு வருவது தலைவர்களின் சூறாவளி சுற்றுப்பயணம்தான். எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் என அந்த கட்சிகளின் தலைவர்கள் பரப்புரைகளை தொடங்கிவிட்டனர். மக்களை தலைவர்கள் எளிதாக சந்திக்க உதவுவது வாகனங்கள்தான். அதற்காகவே பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள் வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். பயணங்கள் அரசியல் தலைவர்களின் வாழ்வில் இன்றியமையாததும் கூட. ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுடன் தொடர்பில் இருக்க தலைவர்கள் பயணம் செய்ய வேண்டியுள்ளது.

மனித நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சி என எந்திர வாகன பயன்பாட்டை சொல்லலாம். நடை வழி பயணமாக இருந்த மனிதனின் பயணம் மெள்ள மெள்ள வளர்ச்சி பெற்று கடந்த 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் எந்திர வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை வடிவமைத்தத்து பிரெஞ்சுக்காரரான நிக்கோலஸ் ஜோசப் குக்னாட். பயண நேரத்தை குறைக்கவும், பயணத்தில் வேகத்தை கூட்டவும் இதை வடிவமைத்துள்ளார். ஆனால் பிற்காலத்தில் இந்த எந்திர வாகனங்கள்தான் சுழலும் பூமிக்கு நிகராக சுழல போகிறது என அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.

ஈ.வே.ரா தொடங்கி பெரும்பாலான அரசியல் தலைவர்கள் பிரசாரங்களுக்கு வாகனங்களை பயன்படுத்தியுள்ளனர். 1973இல் ஈ.வே.ரா-வுக்காக Fargo ரக வேன் சொகுசு வசதியுடன் கூடிய வேனாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் அமர்ந்தபடி பிரசாரம் செய்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவும் பிரசார வாகனங்களில் பயணம் செய்து தேர்தல் நேரங்களில் பரப்புரை மேற்கொண்டுள்ளனர். இதில் எம்.ஜி.ஆர் முன்னோடி. வேனின் மேற்கூரை வழியாக நின்றபடி பிரசாரம் செய்தவர். காமராஜர் மற்றும் அண்ணா மாதிரியான தலைவர்களுக்கு போக்குவரத்து வசதி அதிகளவில் இல்லாததால் புகைவண்டி, ஜீப் மூலமாக பிரசாரம் செய்துள்ளனர். தலைவர்களுக்காக தயாராகும் வாகனங்களில் அவரவர் சவுகரியத்திற்கு ஏற்ப பிரசாரத்திற்கான வாகனங்கள் கஸ்டமைஸ் செய்யபப்ட்டன. 2014 நாடாளுமன்ற தேர்தலின்போதும், 2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் பயணித்து மாநாடுகளில் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

அரசியல் தலைவர்களுக்காக வாகனங்களை கஸ்டமைஸ் செய்து கொடுக்கும் கோவையை சேர்ந்த தனியார் வாகன வடிவமைப்பக நிறுவன உரிமையாளர் முகமது ரியாஸிடம் பேசினோம்…

"அரை நூற்றாண்டுக்கு மேலாக எங்கள் குடும்பம் இந்தத் தொழிலை செய்து வருகிறது. எங்களது அப்பாதான் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு தேவைப்படும் பிரசார வாகனத்தை வடிவமைக்கும் பணியை தொடங்கி வைத்தவர். தலைவர்களின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும் இந்த வாகனங்களை நகரும் வீடு என சொல்லலாம். 

கார், ஜீப், டெம்போ டிராவலர் வேன் மாதிரியான வாகனங்களை நாங்கள் கஸ்டமைஸ் செய்து கொடுக்கிறோம். இது அனைத்தும் சாலை போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு செய்து கொடுக்கப்படுகின்றன. இப்போதுகூட பம்பர் பயன்படுத்த வேண்டாம் என சொல்லிவிட்டதால் அதை பயன்படுத்துவதை தவிர்த்து வருகிறோம்.

பிரசார வேனை வாங்கி பதிவு செய்தபின்னர் அரசியல் கட்சியினர், அந்த வாகனத்தை எங்களிடம் கொடுத்து விடுவார்கள். நாங்கள் அவர்களின் தேவைக்கேற்ப வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்போம். பெரிய வண்டி, சின்ன வண்டி என்று பிரசார வாகனங்களை தயாரிக்கிறோம். தலைவர்கள் பிரசாரம் செய்வதற்கு ஏதுவாக கார்ட்லெஸ் மைக், ஸ்பீக்கர், வாகனத்தின் இரண்டு பக்கமும் பாதுகாவலர்கள் நிற்பதற்கான வசதி, கைப்பிடி, இருக்கைகள், தலைவர்கள் வாகனத்தின் கூரையில் நிற்பதற்கு வசதியாக வாகனத்திற்குள் மினி ஸ்டேஜ், ஓய்வெடுப்பதற்கான படுக்கை வசதி, கழிப்பறை, டிவி, ரிவால்விங் சீட், ஹைட்ராலிக் லிஃப்ட் (தேவைப்பட்டால்), ஏர் சஸ்பென்ஸர், சிசிடிவி கேமரா போன்ற நவீன வசதிகள் இதில் இருக்கும். 

ஒரு வாகனத்தை தயார் செய்ய 15 நாட்கள் முதல் 4 மாதங்கள் வரை நேரம் எடுக்கும். அவரவர் தேவைக்கு ஏற்ப வண்டிகளை மாற்றி அமைப்பதற்கான நேரம் மாறுபடும். ஒவ்வொரு வண்டிக்கும் அதிகபட்சம் 12 நபர்கள் வரை வேலை பார்ப்பார்கள். தேர்தல் நெருங்கும் சமயங்களில் கொஞ்சம் ஓவர் டியூட்டி பார்க்க வேண்டி இருக்கும்" என்கிறார் அவர்.

தமிழகம் மட்டுமல்லாது பக்கத்து மாநிலங்களுக்கும் இங்கிருந்து வாகனங்கள் தயார் செய்து கொடுக்கிறோம் என்கிறார் அவர். பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்களுக்கு ரியாஸ் நிறுவனம் வடிவமைத்து கொடுக்கின்ற வாகனங்களையே பிரசாரத்திற்கு பயன்படுத்துகின்றனர். 

கோவையில் இதுபோல வானங்களை கஸ்டமைஸ் செய்து கொடுக்கும் நிறுவனங்கள் பல உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

- எல்லுச்சாமி கார்த்திக்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com