எம்.ஜி.ஆர், கருணாநிதி, விஜயகாந்த்... விளிம்புநிலை 'டூப்' தலைவர்களின் தினக்கூலி தெரியுமா?

எம்.ஜி.ஆர், கருணாநிதி, விஜயகாந்த்... விளிம்புநிலை 'டூப்' தலைவர்களின் தினக்கூலி தெரியுமா?
எம்.ஜி.ஆர், கருணாநிதி, விஜயகாந்த்... விளிம்புநிலை 'டூப்' தலைவர்களின் தினக்கூலி தெரியுமா?

எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பரப்புரைகள், பொது குழு, தீர்மானம், கூட்டணி வியூகம், மாநாடு என பல்வேறு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் போல வேடமிட்டு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் மேடை கலை நடிகர்களான 'டூப் அரசியல் தலைவர்கள்'.

"சிறு வயது முதலே கலை மீது அதிக ஆர்வம் என்பதனால் இத்துறையில் கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறேன். எம்.ஜி.ஆர் அவர்களின் தீவிர ரசிகனான நான், அவரைப் போல வேடமிட்டு மேடைகளில் நடிக்கத் துவங்கினேன். ரசிகர்களிடையே அதற்கு வரவேற்பு கிடைத்தமையால் தொடர்ச்சியாக எம்.ஜி.ஆர் போலவே வேடமிட்டு நடித்து வருகிறேன். மேடையில் எம்.ஜி.ஆர் போல பேசவும், ஆடவும் செய்வேன். பெரும்பாலும் அ.தி.மு.க கூட்டங்களில் பங்கேற்பேன்" என்கிறார் சேலம் - எடப்பாடியை சேர்ந்த எம்.ஜி.ஆர் நாகராஜ்.

"மேடைகளில் நடிப்பதைத் தவிர வேறு எந்தவொரு வேலையும் எனக்குத் தெரியாது. அசப்பில் விஜயகாந்த் போல இருப்பதனால் அவரைப் போல வேடமிட்டு மேடைகளில் நடிக்கத் துவங்கினேன். அவர் தே.மு.தி.க கட்சியை நிறுவிய பின்னர் அக்கட்சியின் பொதுக் கூட்டங்கள், மாநாடு போன்றவற்றிற்கு விஜயகாந்த் போல வேடமிட்டு நடித்து வருகிறேன். 

தற்போது எங்களை போன்ற கலைஞர்களுக்கு கட்சி பொதுக் கூட்டங்களில் மட்டுமே நடிக்க அனுமதி கிடைக்கிறது. நாள் ஒன்றுக்கு குறஞ்சது 500 ரூபாய் வரை கூலி கிடைக்கும். மேடை நிகழ்ச்சிகள் இல்லாத நாட்களில் எங்களது பாடு திண்டாட்டம்தான்" என்கிறார் நாமக்கல் பகுதியை சேர்ந்த விஜயகாந்த் குமார்.

"கலைஞர் போல வேடமிடுவேன். திமுக கட்சியின் கூட்டங்களில் பெரும்பாலும் பங்குபெறுவேன். கட்சி கூட்டங்கள், மாநாடு மற்றும் தலைவர்களின் பிறந்தநாளை தவிர மற்ற நாட்களில் எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு வேலை இருப்பதில்லை. நிகழ்ச்சி இல்லாத நாட்களில் சொந்த வேலையில் ஈடுபடுவோம். எனது முன்னோர்கள் நாடகத்தில் நடித்து வந்தமையால் கலைத் துறை மீது எனக்கு ஆர்வம் எழுந்தது. துவக்கத்தில் கட்டைக் கூத்தில் நடித்தேன், தற்போது மேடையில் நடித்து வருகிறேன். தேர்தல் நேரங்களில் தலைவர்கள் போல் வேடமிடும் என்னைப் போன்றவர்களுக்கு டிமாண்ட் அதிகம். இந்நேரத்தில் எங்களுக்கு 1000 முதல் 2000 ரூபாய் வரை கூலி கிடைக்கும். தமிழக முழுவதும் எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளேன்" என்கிறார் காந்தி. 

காமராஜர், அம்பேதகர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், மோடி போல வேடமிடும் குறிஞ்சிப்பாடி - வெங்கடம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் 'கலைஞர்' மார்கண்டேயன்.

"தலைவர்கள் வரும் வரையிலும், கூட்டம் கூடும் வரையிலும் மட்டுமே நாங்கள் மேடைகளில் ஆட வேண்டும். எங்களது கையசைவிற்கு தொண்டர்கள் மத்தியில் விசில் பறக்கும். தலைவர்கள் மேடை ஏறியவுடன் நாங்கள் கீழே இறக்கப்படுவோம். எங்களது குறைகளை கூடச் சொல்ல கட்சி நிர்வாகிகள் அனுமதி கொடுக்க மாட்டார்கள். எங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு ஏதேனும் செய்ய வேண்டும்" என கோரிக்கை வைக்கின்றனர் தமிழக திரைப்பட மேடை நடனக் கலைஞர்கள் நலச் சங்க உறுப்பினர்கள்.

ஜெயலலிதா, கமலஹாசன் போல வேடமிடுபவர்களுக்கும் இப்போது டிமெண்ட் உள்ளதாம். ரஜினிகாந்த அரசியல் கட்சி ஆரம்பித்து இருந்தால் அவரது பெயரை சொல்லி எங்கள் பிழைப்பு ஓடியிருக்கும் எனவும் சொல்கின்றனர் தலைவர்கள் போல வேடமிடும் நடிகர்கள். 

தமிழகம் முழுவதும் தேடிப் பார்த்தால் 100 விஜயகாந்த், 500 கருணாநிதி மற்றும் 1000 எம்.ஜி.ஆர் டூப்களை பிடிக்கலாம்!

- எல்லுச்சாமி கார்த்திக்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com