ஃபேஸ்புக் பாஸ்வேர்டை கொடுக்க மறுத்தவருக்கு சிறை!


போலீஸ் விசாரணையின் போது ஃபேஸ்புக் பாஸ்வேர்டை கொடுக்க மறுத்த இளைஞருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பிரிட்டனை சேர்ந்தவர் ஸ்டீபன் நிக்கல்சன். இவரின் குடும்ப பெண் தோழியான 13 வயது லூசி மக்ஹுக் கடந்த ஜூலை மாதம் 26-ஆம் தேதி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் கூட லூசி வீட்டில்தான் நிக்கல்சன் இருந்ததாக தெரிகிறது. எனவே லூசி மரணம் தொடர்பாக நிக்கல்சன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர்.

எனவே லூசிக்கு நிக்கல்சன் ஏதாவது தனிப்பட்ட முறையில் மெசேஜ்கள் அனுப்பினாரா..? அவர்கள் இருவருக்கும் ஏதேனும் உறவு இருந்திருக்குமா..? என சந்தேகம் அடைந்த போலீசார் நிக்கல்சனின் ஃபேஸ்புக் சாட்டிங்கை ஆராய திட்டமிட்டனர். அதற்காக நிக்கல்சனிடம் ஃபேஸ்புக் பக்கத்தின் பாஸ்வேர்டையும் கேட்டனர். ஆனால் நிக்கல்சன் போலீசார் விசாரணையின் போது தனது ஃபேஸ்புக் பக்கத்தின் பாஸ்வேர்டை கொடுக்க முடியாது என மறுத்துவிட்டார். தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கும் என்றும் அவர் கூறியதாக தெரிகிறது. இதனிடையே பேஸ்புக் பக்கத்தின் பாஸ்வேர்டை விசாரணைக்காக கொடுக்காத நிக்கல்சனின் சாக்குப்போக்கு காரணத்தினை ஏற்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள் அவருக்கு 14 மாத சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

ஆர்ஐபிஏ சட்டத்தின்படி விசாரணைக்காக போன், கணினி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களின் பாஸ்வேர்டை போலீசார் கேட்டால் சந்தேக நபர் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் சிறைத்தண்டனை விதிக்க நேரிடும்.

POST COMMENTS VIEW COMMENTS