பேரிடரை சந்திக்கும் நாட்டிற்கு, பிற நாடுகள் உதவ வேண்டும் - பிரதமர் மோடி


இயற்கை பேரிடர் பாதிப்புகளை சந்திக்கும் அண்டை நாடுகளுக்கு, பிற நாடுகள் உதவ வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

தெற்காசிய மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் 4-வது பிம்ஸ்டெக் மாநாடு நேபாளில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், பிம்ஸ்டெக் கூட்டமைப்பைச் சேர்ந்த இந்தியா, நேபாளம், வங்கதேசம், பூடான், இலங்கை, மியான்மர், தாய்லாந்து ஆகிய 7 நாடுகள் பங்கேற்றுள்ளன. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ளார். முதல் நாள் மாநாட்டில் பேசிய மோடி, இயற்கை பேரிடரின்போது, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். 

பயங்கரவாதம் மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று கூறினார். யாராலும் தனியாக அமைதியை நிலைநாட்ட முடியாது என்றும், அனைவரும் கைகோர்த்து பயணிப்போம் என்றும் தெரிவித்தார். வர்த்தக தொடர்பு, பொருளாதார தொடர்பு, போக்குவரத்து தொடர்பு, மக்கள் தொடர்பு ஆகியவற்றுக்கு இதுவே சரியான நேரம் என குறிப்பிட்டார். முன்னதாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன ஆகியோரை பிரதமர் மோடி தனித்தனியே சந்தித்துப் பேசினார்.

POST COMMENTS VIEW COMMENTS