“பாலியல் குற்றத்தை மறைத்த போப் பதவி விலக வேண்டும்” - தூதர் வலியுறுத்தல்


பாலியல் குற்றச்சாட்டுகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததற்காக தார்மீக பொறுப்பேற்று வாடிகன் போப் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் வாடிகன் தூதர் மரியா விகானோ வலியுறுத்தியுள்ளார்.

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வாடிகன் போப், பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்ட பாதிரியார்களை மன்னிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களிடமும், பொதுமக்களிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். பாதிரியார்களால் நிகழ்த்தப்பட்ட வெறுக்கத்தக்க குற்றங்கள் குறித்து கத்தோலிக்க தேவாலயங்கள் போதிய நடவடிக்கையை எடுக்காததற்கு தாம் வெட்கப்படுவதாகவும் போப் ஃபிரான்சிஸ் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், கத்தோலிக்க தேவாலயங்கள் குற்றத்தை மறைத்தற்காகவும், முன்னாள் கார்டினல் மெக் காரிக் மீதான தடையை நீக்கியதற்காகவும், தார்மீக பொறுப்பேற்று வாடிகன் போப் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் வாடிகன் தூதர் மரியா விகானோ வலியுறுத்தியுள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டே வாஷிங்டனின் கார்டினலாக இருந்த மெக் காரிக் செய்த குற்றங்களை போப்பின் கவனத்துக்கு தாம் எடுத்துச் சென்றதாகவும், ஆனால், அதை அவர் மறைத்துவிட்டார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் காரிக் மீது முந்தைய போப் விதித்த தடையையும், தற்போது உள்ள போப் ஃபிரான்சிஸ் நீக்கி விட்டு, அவரை நம்பிக்கைக்குரியவராக அறிவித்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS