ஈரான் தயாரித்த முதல் போர் விமானம்


அமெரிக்காவுடனான உறவு சீர்குலைந்து வரும் நிலையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் போர் விமானத்தை ஈரான் அறிமுகம் செய்துள்ளது. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஈரானுடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து அண்மையில் விலகிய அமெரிக்கா, அந்நாட்டின் மீது புதிதாக பொருளாதார தடைகளை விதித்தது. இதனால் ஈரான், அமெரிக்கா இடையே வார்த்தை போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவை எரிச்சல்படுத்தும் வகையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் போர் விமானத்தை ஈரான் அறிமுகம் செய்துள்ளது. கவுசர் என பெயரிடப்பட்டுள்ள இந்த போர் விமானம் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.

போர் சமயத்தில் ஆயுதங்களை சுமந்து சென்று, எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் படைத்தது என ஈரான் தெரிவித்துள்ளது. இந்த போர் விமானத்தை ஈரான் அதிபர் ஹஸன் ருஹானி அறிமுகம் செய்து வைத்து, ராணுவத்துக்கு அர்ப்பணித்தார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், தங்கள் நாட்டின் ‌ராணுவ பலத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த போர் விமானம் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார். ஈரான் மீது போர் தொடுத்தால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை அமெரிக்கா நன்கு அறியும் என்றும், அதன் காரணமாகவே இதுவரை ஈரான் மீது அமெரிக்கா எந்தத்‌ தாக்குதலையும் நடத்தவில்லை என்றும் ருஹானி பெருமை பொங்க கூறினார்.

POST COMMENTS VIEW COMMENTS