''கேரளாவுக்கு உதவுங்கள்'' - உலக நாடுகளுக்கு போப் வேண்டுகோள்


கேரளாவில் மழை வெள்ளத்தால் பெரும் அழிவு ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கு உதவ உலக நாடுகள் முன் வர வேண்டும் என போப் ஃப்ரான்சிஸ் கேட்டுக்கொண்டுள்ளார். 

வாட்டிகனில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பிரார்த்தனையின் போது போப் இவ்வாறு கூறினார். கேரள மக்களுக்கு உதவ தங்கள் கத்தோலிக்க சர்ச் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் போப் தெரிவித்தார். வெள்ளம் மற்றும் மண் சரிவில் இறந்தவர்களுக்காக பிரார்த்திக்குமாறும் அங்கு கூடியிருந்தவர்களிடம் போப் கேட்டுக்கொண்டார்.

அப்போது போப் பேசுகையில், “கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட கனமழை, மண்சரிவால் கேரள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானவர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவ உலக நாடுகள் முன் வர வேண்டும்” என்று கூறினார்.

        

இதனிடையே, வாடிகனில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் பிரார்த்தனையின் போது கேரளாவுக்கு உதவுங்கள் என்ற கோரிக்கை அடங்கிய பேனர்களுடன் சிலர் நின்றிருந்தார்கள். 

        

கேரளாவில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் இதுவரை சுமார் 350க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 6 லட்சத்துக்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS