‘தெற்காசியாவின் உதாரண நாடு இந்தியா’- அமெரிக்கா புகழாரம்


ஜனநாயகத்தை ஆதரித்ததன் மூலம் தெற்கு ஆசியாவில் சிறந்த உதாரண நாடாக இந்தியா திகழ்கிறது என 72 ஆவது சுதந்திர தினத்துக்கு வாழ்த்து தெரிவித்து, அமெரிக்கா புகழாரம் சூட்டியுள்ளது.

அமெரிக்கா அரசு சார்பில் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ, இந்திய- அமெரிக்க உறவை இளம் மாணவர்கள் வலுப்படுத்தி வருவதாக தெரிவித்தார். இந்தியாவின் சுதந்திர தினத்தில் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வதாக தெரிவித்துள்ள பாம்பியோ, தனித்துவமான நாகரிகம், ஜனநாயகம் ஆகியவற்றுடன் உலகை தலைமையேற்றுச் செல்லும் சரியான பாதையில் இந்தியா பயணிக்கிறது என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். 

சுதந்திரம் பெற்ற நாள் முதலாக, ஜனநாயகம், வேற்றுமையில் ஒற்றுமை, சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றுக்கு மதிப்பு அளித்து தெற்காசியாவில் உதாரண நாடாக இந்தியா திகழ்கிறது என்றும் பாம்பியோ தெரிவித்துள்ளார். மிகவும் பழமையான மற்றும் மிகப் பெரிய ஜனநாயக நாடுகள் என்ற பெருமையுடன் இந்தியாவும், அமெரிக்காவும் இணை பிரியா நட்பை போற்றி வருவதாகவும், சுகாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், அறிவியல், உயர் தொழில்நுட்பம் ஆகியத் துறைகளில் இருநாடுகளும் முக்கிய பங்களிப்பு அளித்து வருகின்றன என்றும் பாம்பியோ கூறியுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS