‘ரஷ்ய வழக்கறிஞரை சந்தித்தது உண்மைதான்’’ - ட்ரம‌ப் ஒப்புதல்


அமெரிக்க தேர்தலின்போது ஹிலாரி கிளிண்டன் குறித்த தகவல்களை பெற தனது மகன் ரஷ்ய வழக்கறிஞரை சந்தித்தது உண்மைதான் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார். அதேசமயம் சட்டரீதியாகவே  அந்தச் சந்திப்பு நடந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒபாமாவின் பதவிக் காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் நடத்தப்பட்டது. அந்தத் தேர்தலில் ட்ரம்புக்கு சாதகமாக ரஷ்யாவின் தலையீடு இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை ட்ரம்ப் தொடர்ச்சியாக மறுத்து வந்தார். இந்நிலையில் ஹிலாரி கிளண்டன் குறித்த தகவல்களை பெற தனது மகன் ரஷ்ய வழக்கறிஞரை சந்தித்தது ‌உண்மைதான் என ட்ரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக ட்ரம்ப் வெளியிட்ட ட்விட்டரில், எதிர்க்கட்சி வேட்பாளர் தொடர்பான தகவல்களை சட்டரீதியாகவே தனது மகன் ஜூனியர் ட்ரம்ப் சேகரித்ததாகவும், அரசியலில் ‌இது எப்பொழுதும் நிகழக் கூடியதுதான் என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருந்த ட்ரம்ப், தனது மகனுக்கு எதிராக வெளியான செய்திகள் அனைத்தும் இட்டுக்கட்டப்பட்டவை என குறிப்பிட்டிருந்தார். தற்போது அதை மாற்றி, அவர் கருத்து தெரிவித்திருப்பது‌ அமெரிக்க அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS