இந்திய சிறையில் வெளிச்சம் இருக்குமா ? மல்லையா விவகாரத்தில் புதிய உத்தரவு 


விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டால் அடைக்கப்படவுள்ள சிறை எப்படி இருக்கும் என்பது குறித்த வீடியோவை சமர்ப்பிக்க வேண்டும் என இந்திய அரசுக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய சிறைகளில் வெளிச்சம் இருக்காது என்ற மல்லையா தரப்பு புகாரையொட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் இருந்து பெற்ற 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்தாமல் லண்டனில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதுதொடர்பாக வங்கிகளின் சார்பாக லண்டன் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது மல்லையா நாடு கடத்தப்பட்டால் மும்பை சிறையில் அடைக்க வாய்ப்புள்ளதாக இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. படுக்கை, மேற்கத்திய கழிப்பறை வசதிகள் கொண்ட சிறையில் அடைக்கப்படுவார் என்று கூறி அதற்கான புகைப்படங்களை சமர்ப்பித்தது. 

ஆனால், இந்தியா தெரிவிக்கும் வகையில் சிறையில் வசதிகள் இருக்காது என்று மல்லையா தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி, மல்லையா அடைக்கப்படவுள்ள சிறையை வீடியோ எடுத்து சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்தினார். சூரிய ஒளி இருக்கிறதா என்பதை உறுதிபடுத்தும் வகையில் நண்பகல் நேரத்தில் வீடியோ எடுக்க வேண்டும் எனக் கூறி செப்டம்பர் 12ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார். இந்த வழக்கின் போது லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆஜராகியிருந்தார்.

POST COMMENTS VIEW COMMENTS