பங்களாதேஷில் வைரலாகும் முத்த போட்டோ: புகைப்படக்காரருக்கு நெருக்கடி


பங்களாதேஷில் காதலர்கள் மழை நீரில் முத்தமிட்டபடி இருக்கும் புகைப்படம் ஒன்று அங்கு வைரலாக பரவி வருகிறது. இதனால் அதை எடுத்த புகைப்படக்காரருக்கு கடும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

பங்களாதேஷின் டாக்கா பல்கலைக்கழகத்தில் காதலர்கள் இருவர், பெய்யும் மழையை பொருட்படுத்தாமல் முத்தமிட்டுக் கொண்டு இருந்துள்ளனர். இதனை அவ்வழியாக சென்ற புகைப்படக்காரர் ஜிபோன் அகமது, அழகாக புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் அதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதற்கு ஏராளமான வரவேற்பு. அவர் புகைப்படத்தை பதிவேற்றிய சில மணி நேரத்திற்குள்ளேயே அதிகம் பேரால் புகைப்படம் ஷேர் செய்யப்பட்டு வைரலானது. அதேசமயம் புகைப்படத்தை எடுத்த அகமதுவிற்கு நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளன.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் பங்களாதேஷில் இந்தப் புகைப்படம் சிலரால் வெறுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. கடந்த சில மாதத்திற்கு முன்னதாக தான் இந்த டாக்கா பல்கலைக்கழகத்தில் இருவர் கை கோர்த்து சென்றததற்காக சில மாணவர்கள் அவர்களைத் தாக்கியுள்ளனர். பின்னர் தாக்குதல் நடத்திய மாணவர்கள் பல்கலைக்கழகத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அந்தப் பல்கலைக்கழகத்தில் தான் இருவர் முத்தமிட்டு கொண்டிருக்கும்  காட்சியை அகமது புகைப்படம் எடுத்துள்ளார். 

இதுகுறித்து ஒருவர் தனது வலைத்தள பக்கத்தில், “காதலர்களுக்கு நாளுக்கு நாள் இங்கு தைரியம் அதிகரித்து வருகின்றது.  முன்னதாக இதனையெல்லாம் மறைமுகத்தான் செய்து வந்தார்கள். ஆனால் இப்போது அவர்கள் இதனை பட்டப்பகலில் செய்ய ஆரம்பித்துவிட்டனர். பொதுவெளியில் அவர்கள் காதல் செய்வதற்கு இன்னும் வெகுநாட்கள் இல்லை” எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து புகைப்படக்காரரான அகமது, வாஷிங்டன் போஸ்ட்டிற்கு கூறும்போது “நல்ல புகைப்படம் எடுக்க இடம் தேடினேன். அப்போது அவர்கள் இருவரும் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தனர். ஒரே ஒரு க்ளிக்கில் அதனை புகைப்படமாக்கினேன். பின்னர் இதனை நியூஸ் அறைக்கு அனுப்பினேன். ஆனால் எடிட்டர் இதனை வெளியிட வேண்டாம் எனக் கூறிவிட்டார். எதிர்மறை கருத்துகள் வந்துவிடும் என்று கூறினார்.

பின்னர் அதனால் என்னுடைய முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றினேன். ஒரு மணி நேரத்திற்குள் 5,000 ஷேரானது. ஆனால் அடுத்த நாளே சக புகைப்படக்காரர் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர். போதிய காரணமே இல்லாமல் என்னிடம் இருந்து ஐடி மற்றும் லேப்டாப்பை பாஸ் வாங்கி வர சொன்னதாக அவர் தெரிவித்தார். என்னைப் பொருத்தவரை அந்தப் புகைப்படத்தில் நான் தவறு எதையும் பார்க்கவில்லை. அதில் ஆபாசமும் இல்லை. இது ஒரு உண்மையான காதல். இங்குள்ள மக்கள் சிலர் புத்தகத்தில் மட்டும்தான் படித்தவர்களாக உள்ளனர். ஆனால் வாழ்க்கையில் அவர்கள் படித்தவர்களாக இருக்க மறந்துவிடுகின்றனர். என்னுடைய புகைப்படத்தை உணர்ந்து கொள்ள அவர்கள் மறுக்கிறார்கள். இது எனக்கும் கொஞ்சம் சங்கடமாகவே உள்ளது” என்றார்.

பங்களாதேஷில் பத்திரிகையாளர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என தொடர்ச்சியாக கூறப்பட்டு வந்த நிலையில் இந்தச் செய்தி வெளியாகி உள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS