பாகிஸ்தானில் தனிப்பெரும்பான்மை இல்லா நிலை : இம்ரான்கானுக்கு அதிக இடங்கள்


பாகிஸ்தானில் தேர்தல் முடிவுகள் பெருமளவு வெளியாகிவிட்ட நிலையில், எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையே உள்ளது. 

பாகிஸ்தானில் 272 இடங்களுக்கு பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில், 270 தொகுதிகளுக்கான நிலவரங்கள் தெரியவந்துள்ளது. இதில்
முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சி 112 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பாகிஸ்தான்
முஸ்லிம் லீக் நவாஸ் ஷெரிஃப் கட்சி 65 இடங்களுடன் 2வது இடத்தில் உள்ளது. பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான்
மக்கள் கட்சி 43 இடங்களுடன் 3வது இடத்தில் உள்ளது. 

இம்ரான் கானின் கட்சி தனிப்பெருங்கட்சியாக வந்துள்ள நிலையில், அக்கட்சியின் தொண்டர்கள் நாடெங்கும் ஆடல் பாடல் என
உற்சாகமாக வெற்றியை கொண்டாடி வருகின்றனர். நேற்று இரவே வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிட்ட நிலையில், அதிகாரப்பூர்வ
முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் பிற கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான் கான் பிரதமராக வாய்ப்புள்ளது.
இதற்கிடையே தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது எனவும், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் நவாஸ்
ஷெரிப் கட்சி குற்றச்சாட்டியுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS