டேவிட் ஹெட்லி மீது அமெரிக்க சிறையில் தாக்குதல் - மருத்துவமனையில் அனுமதி


மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட டேவிட் ஹெட்லி மீது அமெரிக்க சிறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

மும்பையில், கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர்26-ஆம் தேதி பயங்கரவாதிகள் 10 பேர் நடத்திய தாக்குதலில் 166 பேர் பலியாகினர். 300க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். மும்பையில் உள்ள தாஜ் ஓட்டல், சத்திரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி டேவிட் ஹெட்லிக்கும் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.

பாகிஸ்தான் வாழ் அமெரிக்கரான டேவிட் ஹெட்லி அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். அமெரிக்க சிறையில் இருந்தவாரே அவரிடம் மும்பை போலீசார் வீடியோ கான்ஃபிரஸ் மூலம் விசாரணை நடத்தினர். அவரும் மும்பை தாக்குதலில் தனக்கு இருந்த தொடர்பை ஒப்புக் கொண்டார். அமெரிக்க நீதிமன்றம் ஹெட்லிக்கு 35 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

                    

இந்நிலையில் அமெரிக்காவின் சிகாகோ சிறையில் அடைக்கப்பட்டுள்ள டேவிட் ஹெட்லி மீது அவருடன் உள்ள சக கைதிகள் இருவரே தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த 8-ம் தேதி நடைபெற்றதாக கூறப்படுகிறது. தாக்குதலில் பலத்த காயம் அடைந்த ஹெட்லி உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஹெட்லி மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதுதொடர்பாக அமெரிக்க போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS