மலேரியாவுக்கான புதிய மருந்துக்கு அமெரிக்கா அனுமதி


மலேரியா காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்துக்கு அமெரிக்கா அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். 

60 ஆண்டுகளில் முதன்முறையாக மலேரியா சிகிச்சைக்கான மருந்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை வந்தால் மீண்டும் மீண்டும் வரக்கூடிய மலேரியாவுக்கான இந்த மருந்து Tafenoquine என அழைக்கப்படுகிறது. ஆண்டு தோறும் 85 லட்சம் மக்களை பாதிக்கும் இந்த வகை மலேரியாவில், நோய் பரப்பும் ஒட்டுண்ணி உடலில் தங்கி மீண்டும் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக குழந்தைகள் இவ்வகை மலேரியாவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஒருவர் உடலில் இருக்கும் ஒட்டுண்ணி கொசுக்கள் மூலம் வேகமாக மற்றவர்களுக்கும் பரவுகிறது. இந்த வகை மலேரியாவை ஒழிக்க Tafenoquine மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதனை தற்போது அமெரிக்காவில் பயன்படுத்த உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. மற்ற நாடுகளிலும் மக்கள் பயன்பாட்டுக்கு பரிந்துரைக்க முடியுமா என ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இருக்கும் மருந்துகளுடன் ஒப்பிடும் போது Tafenoquine உடலில் தங்கும் ஒட்டுண்ணியை அழிக்கும் என சொல்லப்படுகிறது. 60 ஆண்டுகளில் முதன்முறையாக மலேரியா சிகிச்சைக்கான மருந்துக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்க்கது.

POST COMMENTS VIEW COMMENTS