டொரன்டோவில் பொதுமக்கள் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு: 14 பேர் படுகாயம்!


கனடாவின் டொரண்டோ நகரில் பொதுமக்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியவன் சுட்டுக்கொல்லப்பட்டான். இதில் சிறுமி உட்பட 14 பேர் படுகாயமடைந்தனர்.

டொரண்டோ அருகில் உள்ள கீரீக்டவுண் பகுதி எப்போதும் பரபரப்பு நிறைந்தது. பிரபலமான ரெஸ்டாரெண்ட் மற்றும் கடைகள் ஏராளமாக உள்ள இங்கு, மக்கள் அதிகமாக கூடுவது வழக்கம். இந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவில் துப்பாக்கியுடன் வந்த ஒருவன், அங்கிருந்த மக்களை நோக்கி சரமாரியாகச் சுட்டான். துப்பாக்கி சத்தம் கேட்டதும் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். இதனால் அந்தப் பகுதி கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. 

இந்த துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுமி உட்பட 14 பேர் படுகாயமடைந்தனர். அந்த இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், படுகாய மடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டொரண்டோ தலைமை போலீஸ் அதிகாரி மார்க் சாண்டர்ஸ் கூறும்போது, ‘துப்பாக்கியால் சுடப்பட்டவன் கொல்லப்பட்டுவிட்டான். 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களது உடல் நிலைக் கவலைக்கிடமாக இருக்கிறது. இது தீவிரவாத தாக்குதலா என்பது பற்றி உடனடியாகச் சொல்ல முடியாது’ என்றார்.

இந்தச் சம்பவம் கனடாவில் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS