5 மாத குழந்தைக்கு பால் ஊட்டியபடி கேட்வாக் செய்த மாடல்..!


அமெரிக்காவில் மாடல் ஒருவர் தனது 5 மாத குழந்தைக்கு பாலூட்டியபடியே கேட்வாக் செய்ததற்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மாடல் மாரா மார்டின். இவர் மியாமி கேட்வாக்கில் தானும் ஒரு மாடலாக பங்கேற்றார். அப்போது அவர் நடந்து வந்தது பலரின் புருவங்களை உயர்த்தும் வகையில் அமைந்தது. காரணம் மாரா, தனது 5 மாத குழந்தைக்கு பால் ஊட்டியப்படியே நடந்து வந்தார். கேட்வாக்கில் பொதுவாக இதுவரை யாரும் செய்யாத விதமாக தனது குழந்தைக்கு பால் ஊட்டியப்படி நடந்து வந்தார். இதனைக் கண்ட ஒருசிலர் மாராவின் துணிச்சலான செயலை பாராட்டினர். மற்றவர்களோ பார்ப்பதற்கு கொஞ்சம் சங்கடமாகத் தான் உள்ளது என தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இருப்பினும் மாரா கேட்வாக் செய்யும் ஃபோட்டோக்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. கேட்வாக்கில் அவர் கோல்டன் நிற பிகினி உடை அணிந்திருந்தார். தனது 5 மாத குழந்தையான அரியாவுக்கும் அவர் நீச்சல் உடையே அணிவித்திருந்தார். அத்தோடு மட்டுமில்லாமல் வெளிப்புற சத்தம் குழந்தைக்கு கேட்டுவிடாதபடி ஹெட் போனையும் குழந்தைக்கு அவர் அணிவித்திருந்தார்.

சமூக வலைதளங்களில் மாராவின் செயல் விவாதப் பொருளாக மாறியபோதிலும் அவர் தனது ரசிகர்களுக்கு நன்றியினை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர் பெருமளவு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார். மேலும் “ நான் தினசரி செய்வதை போன்றுதான் குழந்தைக்கு பால் கொடுத்தேன். அப்படியிருக்க நானும் என் குழந்தையும் தலைப்பு செய்தியாக மாறியிருப்பதை பார்க்கும்போது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. எனது குழந்தையின் தினசரி சாப்பாட்டு நேரம் அது. எனவே குழந்தை பசியால் இருந்தது. அதனால் பால் ஊட்டினேன்” என்றும் கூறியுள்ளார். 

POST COMMENTS VIEW COMMENTS