“ரஷ்யாவின் தலையீடு இருந்ததை ஏற்கிறேன்”- கருத்தை மாற்றிய ட்ரம்ப்..!


அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்ற உளவு அமைப்புகளின் கருத்தை ஏற்பதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹெல்சிங்கியில் ரஷ்ய அதிபர் புதினுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிடுவதற்கான காரணம் இருப்பதாக தெரியவில்லை என கூறியிருந்தார். அமெரிக்க உளவு அமைப்புகள் ரஷ்யாவின் தலையீட்டை உறுதி செய்திருக்கும் நிலையில் அதற்கு எதிராக ட்ரம்ப் கருத்து தெரிவித்ததாக கூறி ட்ரம்பின் சொந்த கட்சியினரே அவரை கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில் தற்போது 2016 அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்ற அமெரிக்க விசாரணை அமைப்புகளின் முடிவினை தான் ஏற்பதாகவும், விசாரணை அமைப்புகளின் மீது முழு நம்பிக்கை இருப்பதாகவும் கூறியுள்ளார்.  wouldn't என்பதற்கு பதிலாக would என்ற வார்த்தையை மாற்றி பயன்படுத்தி விட்டதால் தன்னுடைய வாக்கியத்தில் பிழை ஏற்பட்டுவிட்டதாக ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார். கடும் எதிர்ப்புகள் கிளம்பியதை தொடர்ந்தே டொனால்ட் ட்ரம்ப் திடீர் திருப்பமாக தனது கருத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார் என்றே பலரும் இதனை கூறி வருகின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS