கொன்று குவிக்கப்பட்ட 200 முதலைகள்? - இப்படியா பழிவாங்குவார்கள்?


இந்தோனிஷியா நாட்டில் 292 முதலைகள் ஒரே நேரத்தில் கொன்று குவித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலைகள் நூற்றுக் கணக்கில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது போன்ற புகைப்படத்தை அந்தாரா செய்தி நிறுவனம் வெளியிட்டது. இதனையடுத்து, இந்தச் சம்பவம் வெளியே வந்தது. கிழக்கு இந்தோனிஷியாவின் சோராங் மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 

சோராங் மாவட்டத்தில் உள்ள முதலைப் பண்ணை ஒன்றிற்கு சில தினங்களுக்கு முன் 48 வயதான ஒருவர் சென்றுள்ளார். விலங்குகளுக்கு புல் கொண்டு வருவதற்காக அவர் அங்கு சென்றுள்ளார். ஆனால், அங்கிருந்த முதலை அவரை தாக்கியுள்ளது. அந்த நபரின் அலறல் சத்தம் கேட்டு பண்ணையில் வேலை செய்யும் தொழிலாளி ஓடி வந்துள்ளார். அதற்குள் அந்த நபர் முதலையால் தாக்கப்பட்டு இறந்துவிட்டார்.

முதலைப் பண்ணையில் நடந்த சம்பவத்தால் அப்பகுதி கிராம மக்கள் ஆத்திரமடைந்தனர். பண்ணைக்குள் கும்பலாக நுழைந்து, முதலைகளை பழிவாங்கும் நோக்கில் சரமாரியாக தங்களது ஆயுதங்களால் வெட்டித் தள்ளியுள்ளனர். இதில் 200க்கும் மேற்பட்ட முதலைகள் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டன.

                    

இதுகுறித்து இயற்கை வளங்கள் பாதுகாப்பு நிறுவன அதிகாரி கூறுகையில், “சம்பந்தப்பட்ட அந்த முதலைப் பண்ணைக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அழிந்துவரும் சில விலங்கினங்களை பாதுகாக்கும் பொருட்டு 2013ம் ஆண்டு இந்த உரிமம் வழங்கப்பட்டது. உயிரிழந்த முதலைகள் மிகவும் அரிதானவை. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க பண்ணைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். முதலைகள் கடவுளின்  படைப்பு. அதனை பாதுகாக்க வேண்டும்” என்றார்.

POST COMMENTS VIEW COMMENTS