15 நாட்களாக குகைக்குள் தவித்த சிறுவர்கள்: வீரர்களின் முயற்சியால் 4 பேர் பத்திரமாக மீட்பு


தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய 12 சிறுவர்களில் 4 பேர் இன்று பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கடந்த 23-ஆம் தேதி, 16 வயதுக்கு உட்பட்ட 12 கால்பந்தாட்ட வீரர்களும் அவர்களின் பயிற்சியாளரும் தாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்கு சென்றனர். அப்போது திடீரென மழை பெய்து குகை நுழைவுவாயிலில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் இவர்கள் வெளியே வர முடியாமல் குகைக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர். அவர்களின் நிலைமை என்ன ஆனது என தெரியாமல் நாடே பதற்றத்தில் ஆழ்ந்தது. ஆனால் 9 நாட்களுக்கு பிறகு அவர்கள் குகைக்குள்ளே பல கிலோமீட்டர் தள்ளி ஒரு சின்ன திட்டின்மீது தவித்துக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் அவர்களில் பலருக்கு நீச்சல் தெரியாததால் மீட்புப் பணி தாமதமானது. தாய்லாந்து ராணுவமும், கடற்படையும் இவர்களை மீட்கும் பணியை தொடங்கியது. தொடர்ந்து பெய்த மழை, வடியாத வெள்ளம், சேறு, சகதி ஆகியவை மீட்பு பணிகளில் சிக்கலை ஏற்படுத்தின. அதனால் இந்த விவகாரம் சர்வதேச அளவிலான செய்தியாக மாறியது. பல நாடுகளை சார்ந்த அனுபவம் வாய்ந்த ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் வீரர்களின் தொடர் முயற்சியால் 4 சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. பலநாட்கள் போராட்டத்திற்கு பின் சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதால் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS