10 நாட்களாக குகை இருளில் தவிக்கும் சிறுவர்கள்.. மீட்புப் பணியில் தொடரும் சிக்கல்..!


தாய்லாந்தில் 10 நாட்களுக்கு முன்பு குகையில் சிக்கிக் கொண்ட 13 பேரும் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்களை வெளியே கொண்டு வருவதில் சிக்கல் நீடிக்கிறது.

இருள் சூழந்த குகை.. உணவு கிடையாது.. வெளியேற வழியில்லை... இப்படி ஒரு அபாயமான சூழலிலும் திடகாத்திரமாக 9 நாட்களை கடந்துள்ளனர் தாய்லாந்தை சேர்ந்த சிறுவர்கள்...

கடந்த 23-ஆம் தேதி, 16 வயதுக்கு உட்பட்ட 12 கால்பந்தாட்ட வீரர்களும் அவர்களின் பயிற்சியாளரும் தாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்கு சென்றனர். அப்போது திடீரென மழை பெய்து குகை நுழைவுவாயிலில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் இவர்கள் வெளியே வர முடியாமல் குகைக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர். தாய்லாந்து ராணுவம் இவர்களை மீட்கும் பணியை தொடங்கியது. தொடர்ந்து பெய்த மழை, வடியாத வெள்ளம், சேறு, சகதி ஆகியவை மீட்பு பணிகளில் சிக்கலை ஏற்படுத்தின.

இந்த சூழலில்தான், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு மீட்புக் குழுவினரும் மீட்பு பணியில் இணைந்தனர். பல்வேறு தொழில்நுட்ப முறைகளை கையாண்டு குகையில் தேங்கி இருந்த வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. அதே வேளையில் குகைக்குள் செல்ல வேறு வழிகள் உள்ளனவா என்றும் ஆராயப்பட்டது. இந்த 13 பேரும் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்ற நோக்கில் கிட்டதட்ட 1000 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இவர்களின் முயற்சிகளும் தாய்லாந்து மக்களின் பிரார்த்தனைகளும் வீண் போகவில்லை. 13 பேரும் குகையின் ஒரு பகுதியில் தஞ்சமடைந்திருப்பதை, பிரிட்டனை சேர்ந்த மீட்பு குழுவினர் கண்டறிந்து வீடியோ எடுத்துள்ளனர். எங்களுக்கு மிகவும் பசிக்கிறது, எப்போது நாங்கள் வெளியுலகை காண முடியும் என சிறுவர்கள் கேட்பது பதிவாகியுள்ளது.

சிறுவர்கள் பாதுகாப்பாக இருக்கும் செய்தி தாய்லாந்து மக்களுக்கு கிடைத்த நல்ல செய்தி. தற்போது சிறுவர்களை குகையில் இருந்து பாதுகாப்பாக வெளியே கொண்டு வருவதற்கான பணிகளை மீட்புக் குழுவினர் துரிதப்படுத்தியுள்ளனர். ஆனால் சிறுவர்கள் உடனடியாக குகையில் இருந்து வெளியே வர அவர்களுக்கு நீச்சல் தெரிந்திருக்க வேண்டும் அல்லது குகையில் இருக்கும் நீர் முற்றிலும் வடியும் வரை அதாவது சில மாதங்கள் குகை உள்ளேயே இருக்க வேண்டும் என்கிறது தாய்லாந்து ராணுவம்.

சேறு சகதி நிறைந்த நீரை அதுவும் இருளில் கடந்து வருவது என்பது சாதாரண விஷயமல்ல. எனவே வெள்ளநீர் வடியும் வரை அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிகிறது. முதற்கட்டமாக பயிற்சி பெற்ற மருத்துவரை அங்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். தற்போது குகையில் உள்ள நீரை வேகமாக வெளியேற்றுவதற்கான பணி நடந்து வருகிறது. அதே வேளையில் வேறு வழிகளில் சிறுவர்கள் இருக்கும் பகுதியை அடைய முடியுமா என்றும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 10 நாட்களாக உணவின்றி, இருளிலும் மனம் தளராமல் தன்னம்பிக்கையுடன் இருந்த சிறுவர்கள், இன்னும் சில காலம் அந்த நம்பிக்கையை கைவிடாமல் குகையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

POST COMMENTS VIEW COMMENTS