'12 ஆண்டுகளில் திறமைசாலிகளுக்கு டிமாண்ட்' - அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை 


நாட்டில் அடுத்த 12 ஆண்டுகளில் தி‌றமைசாலிகளுக்கான கடும் தட்டுப்பாட்டை நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சூழல் உருவாகி உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதில் மிகவும் பாதிக்கப்படும்‌ பத்து நா‌டுகளில் இந்தியாவும் ஒன்று என்று இந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது 

ManpowerGroup (மேன்பவர் குருப்) என்ற நிறுவன‌ம், உலகம் முழுவதும் 40 ஆயிரம் ஊழியர்களிடம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில், பணிக்கு தகுந்த திறமைசாலிகள் கிடைக்காமல் நிறுவனங்கள் திணறுவதாக தெரியவந்துள்ளது. இதில் அதிக அளவு பாதிக்கப்படுவது ஜப்பான் என்றும், அங்குள்ள 89 சதவிகித நிறுவனங்கள் தகுந்த திறமைசாலிகள் கிடைக்காமல் பணியிடங்களை நிரப்ப முடியாமல் தவிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதேபோல, ருமேனியாவில் 81 சதவிகித நிறுவனங்களும், தைவானில் 78 சதவிகித நிறுவனங்களும் திறமைசாலிகள் கிடைக்காமல் திணறுகின்றனவாம்.

ஆசிய பசிபிக் நாடுகளைப்பொருத்தவரை திறமைசாலிகள் கிடைக்காமல் திணறும் முதல் ஐந்து நாடுகள் வரிசையில் ஜப்பான், தைவான், ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் இந்தியா நாடுகள் இருக்கின்றன. இந்தியாவில் 56 சதவிகித நிறுவனங்கள் தகுந்த திறமைசாலிகள் இல்லாமல் திணறுவதாக தெரியவந்துள்ளது. பல நிறுவனங்கள் டிஜிட்டல் மயத்திற்கு மாறும்போது, தொழில்நுட்பத்திறமையும், தொடர்புத்திறனும், பிரச்னைகளை சரிசெய்யக்கூடிய திறன் கொண்டவர்களும் போதிய அளவில் கிடைப்பதில்லை என்று நிறுவனங்கள் கூறுகின்றன.

திறமைகளை தேடிக்கண்டுபிடிக்காமல், திறமையை உருவாக்கும் பணிகளை நிறுவனங்கள் உருவாக்க வேண்டிய ‌நிலை இருப்பதாக மேன்பவர் குழுமம் ஆய்வு குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

திறமைகளை வெளியே கண்டுபிடிப்பதைவிட, தங்கள் தொழிலாளர்களின் திறமைகளை வளர்த்தால் மட்டுமே இந்த பிரச்னையை சமாளிக்க முடியும் என்கிறது இந்த நிறுவனம்.
 

POST COMMENTS VIEW COMMENTS