அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 50% வரி உயர்வு: இந்தியா பதிலடி 


இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் அலுமினியம் மற்றும் உருக்கு பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ள நிலையில், அந்நாட்டிலிருந்து இறக்குமதியாகும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட 30 பொருட்களுக்கு வரியை அதிகரிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கிற்கு 25 சதவீதமும், அலுமினியப் பொருட்களுக்கு 10 சதவீதமும் அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது. இதனால் இந்தியாவிற்கு சுமார் 241 மில்லியன் டாலர் அளவுக்கு வணிக ரீதியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 30 பொருட்களுக்கான வரியை 50 சதவீதம் வரை உயர்த்துவதற்கான திட்டத்தை உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா அளித்துள்ளது. இது அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரியை ஈடுகட்டும் வகையில் இருக்கும் என இந்திய அரசு கூறியுள்ளது. 

அதன்படி 800 சிசி மேலான இன்ஜின் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு 50 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. பாதாம் பருப்பு மற்றும் வால்நட்களுக்கு 20 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள்களுக்கு 25 சதவிகித வரி விதிக்கப்படுகிறது. கொண்டைக்கடலை, நட்டு மற்றும் போல்ட்டுகள் உள்ளிட்டவைகளுக்கும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு ஜூன் 21ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இதேபோல, சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS