புதிய தலைமுறை செய்தி எதிரொலி : ஏழை மாணவிக்கு உதவிய கமல்


வறுமையின் பிடியில் வாழ்ந்துவரும் மருத்துவ மாணவி கனிமொழியின் கல்விச்செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உறுதியளித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தில், மிகவும் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர் கனிமொழி. இவர் வறுமையிலும் மருத்துவம் படித்து வருகிறார். கடன் பெற்றும் இயன்ற கூலி வேலைகளை செய்தும் வருமானம் ஈட்டி கனிமொழியின் படிப்பிற்கு அவரது குடும்பத்தினர் செலவிட்டு வந்தனர். இந்நிலையில், ஏழ்மையின் காரணமாக கனிமொழி தற்போது கூலி வேலைக்குச் சென்று வருகிறார். 

இறுதியாண்டு படிக்கும் இந்த நேரத்தில், வறுமை வாட்டி வதைத்து வருவதால் அவரது மருத்துவக் கனவு கேள்விக்குறியானது. இதுகுறித்து புதியதலைமுறையில் செய்தி வெளியானதை அறிந்து பல்வேறு தரப்பினர் கனிமொழிக்கு உதவி வருகின்றனர். அதேபோல், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கனிமொழியை நேரில் அழைத்து கல்வி உதவித் தொகையை அளிப்பதாக உறுதியளித்துள்ளார். செவித்திறன் குறைபாடு கொண்ட கனிமொழியின் சகோதரியின் மருத்துவ சிகிச்சைக்கும் உதவுவதாக கமல்ஹாசன் உறுதியளித்துள்ளார். மேலும், செய்தி வெளியிட்ட புதியதலைமுறைக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சந்திரஹாசன் அறக்கட்டளை மூலம் அறிக்கை வெளியிட்டு அவர், “மாணவி கனிமொழி கல்விக் கட்டணத்திற்காக கூலி வேலை பார்ப்பது புதிய தலைமுறை செய்தியாளர் மூலமாக நேற்றிரவு தெரியவந்தது. மாணவியின் கல்விச்செலவு முழுவதை அண்ணன் சந்திரஹாசன் அறக்கட்டளை மூலம் ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளோம். புதிய தலைமுறைக்கும், அதன் செய்தியாளருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

POST COMMENTS VIEW COMMENTS