அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கக்கோரி முதலமைச்சர் கடிதம்


மறைந்த முதலமைச்சர்கள் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதேபோல், சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆரின் பெயரை சூட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கக்கோரி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். ஜெயலலிதா ஆட்சியில் பொருளாதாரத்தில் தமிழகம் முன்னேறியதாகவும் தற்போது தேசிய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

பொருளாதாரம் மட்டுமின்றி, சுகாதாரம், கல்வி, குழந்தைகள் மற்றும் பெண்கள் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கி வளர்ச்சிக்காக பாடுபட்டவர் ஜெயலலிதா எனக் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று விளையாட்டு உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மறைந்த முதலமைச்சரும், சமூக சீர்திருத்தவாதியுமான பேரறிஞர் அண்ணாவுக்கும் பாரத ரத்னா விருது வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல், மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் நினைவாக அவரது பெயரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்காக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS