‘என் கணவர் வீட்டாரே சாவுக்கு காரணம்’: வீடியோ வெளியிட்ட இளம்பெண்..!


சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் திருமணமாகி ஓராண்டே ஆன நிலையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது தற்கொலைக்கு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என்று வீடியோ பதிவு செய்து அதை அவரது உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார்.

திருமுல்லைவாயிலைச் சேர்ந்த தேவநாத்துக்கும், அம்பத்தூரைச் சேர்ந்த ஆனந்திக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. புதுமணத் தம்பதியும், தேவநாத்தின் பெற்றோரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 10-ஆம் தேதி முதல் திருமண நாள் வந்துள்ளது. அன்று ஆனந்தியிடம் தேவநாத் பேசவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஆனந்தி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தனது முடிவுக்கு கணவர் தேவநாத் மற்றும் அவரது பெற்றோரே காரணம் என்று எட்டு பக்கத்துக்கு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதே போல் தனது தற்கொலைக்கான காரணத்தை வீடியோவாக பதிவு செய்து உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் ஆனந்தி அனுப்பியுள்ளார். கடிதம் மற்றும் வீடியோவை கைப்பற்றி திருமுல்லைவாயில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலைக்கு முன் அப்பெண் வெளியிட்டுள்ள வீடியோவில், “ இங்கிருப்பவர்களுக்கு நான் சிரித்தாலே பிடிக்காது. எனது கடைசி சிரிப்பை பார்த்துக் கொள்ளுங்கள்” என உருக்கமாக கண்ணீர்மல்க பேசியுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS