சொகுசு கார் மோதி சிக்னலில் நின்றிருந்தவர் பரிதாப பலி


சென்னை குரோம்பேட்டையில் அதிவேகமாக சென்ற சொகுசு கார், சிக்னலில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், ‌இருசக்கர வாகனத்தில் சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். 

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பாலகிருஷணன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்தார். வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். குரோம்பேட்டையில் உள்ள சிக்னல் ஒன்றில் சாலையோரமாக அவர் நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு கார் சிக்னலில் நின்று கொண்டிருந்த பாலகிருஷ்ணன் மீது வேகமாக மோதியது.

சொகுசு காரில் சென்ற 4 பேரும் மதுபோதையில், அதிவேகமாக காரை ஓட்டிவந்ததாக கூறப்படுகிறது. அதன்காரணமாகவே சிக்னலில் நின்றிருந்த வாகனம் மீது கார் அதிவேகமாக மோதியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். விபத்து ஏற்படுத்திய காரை அடித்து நொறுக்கிய மக்கள், அதன் உரிமையாளர் வெங்கடேஷ் பெருமாள் என்பவரையும் சிறைபிடித்தனர். காரை பறிமுதல் செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாலகிருஷணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 

POST COMMENTS VIEW COMMENTS