தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்


தமிழகத்தில் மூன்று தி‌னங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் வளிமண்டலத்தில் கீழ் அடுக்கில் மேற்கு திசை காற்றில் தெற்கு கர்நாடகம் முதல் கன்னியாகுமரி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேல் அடுக்கில் கிழக்கு திசை காற்றில் தெலுங்கானா முதல் கன்னியாகுமரி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழக வடமாவட்டங்களில் வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, காஞ்சிபுரம் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு சில இடங்‌களில் ஓரிரு முறை லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கால் பகுதியில் 9 செ.மீ மழையும், நாமக்கல் மாவட்டம் மங்களாபுரம், தர்மபுரி மாவட்டம் அரூர், சோழவந்தான், திருப்பத்தூர், ஸ்ரீ வில்லிபுத்தூர்  ஆகிய இடங்களில் குறைந்த பட்சமாக 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS