முழு நிம்மதி கிடைத்துள்ளது.. முதலமைச்சரை சந்தித்த அற்புதம்மாள் பேட்டி


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்திருப்பதன் மூலம் முழு நிம்மதி கிடைத்திருப்பதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தமிழக அமைச்சரவைக்‌ கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்கும் விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்ய அமைச்சரவை முடிவு செய்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 161-ன் கீழ், 7 பேரையும் முன்விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைக்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்திருப்பதன் மூலம் முழு நிம்மதி கிடைத்திருப்பதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்துக்குச் சென்ற அற்புதம்மாள், அங்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ ஜெயலலிதா அவர்கள் பாதி நிம்மதி கொடுத்தார். தற்போது முழு நிம்மதி கிடைத்துள்ளது. அமைச்சரவை முடிவைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தேன். 7 பேர் விடுதலையை அரசியலாக்க வேண்டாம்” என தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS