தூய்மையான பால் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்


கலப்பட பால் மற்றும் பால் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசு அமைத்துள்ள வழிகாட்டுதல் குழுக்கள், தங்கள் நிறுவனங்களின் பால் மாதிரிகளை பரிசோதனை செய்ய தடை விதிக்கக்கோரி, ஹட்சன் மற்றும் விஜய் பால் நிறுவனங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் முன்னிலையில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், பாலில் கலப்படம் செய்யப்படுவதைத் தடுக்க உச்சநீதிமன்ற உத்தரவின்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

பாலில் கலப்படம் செய்யப்படுவதைத் தடுக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளில் விதிகள் மீறப்படவில்லை என்றும் அவர் விளக்கமளித்தார். ஒவ்வொரு குடிமகனுக்கும் தூய்மையான பால் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டுமென தெரிவித்த நீதிபதி, கலப்படம் செய்தது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கலாம் என கூறியுள்ளார். பால் மாதிரிகளை சோதனை செய்ய தனியார் நிறுவனங்கள் சார்பில் அனைத்து விதமான ஒத்துழைப்பும் வழங்கப்பட வேண்டுமென நீதிபதி கேட்டுக் கொண்டார்.

POST COMMENTS VIEW COMMENTS