ஸ்டெர்லைட் விவகாரம்: மத்திய நீர்வளத் துறைக்கு தமிழக அரசு கடிதம்


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான மத்திய நிலத்தடி நீர் வாரிய அறிக்கையை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய நீர்வளத்துறை செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கடிதம் எழுதியுள்ளார். அதில், அறிவியல் ஆராய்ச்சிப்படி ஆலை மாசால் மக்களின் உடல்நிலை பாதிப்பு என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்ததால்தான், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டதாக தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தூத்துக்குடியில் நீர்மாசு ஆய்வு நடத்த மத்திய நீர்வள அமைச்சகம் ஆணையிட்டது தவறானது என்று கூறியுள்ள அவர், ஆய்வறிக்கை ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக இருப்பது போன்று தோற்றமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் நீர்மாசு குறித்து ஆய்வு நடத்த உத்தரவிட்டது தேவையற்றது என்று தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய நீர்வளத்துறையின் அறிவியல்பூர்வமற்ற ஆய்வு அறிக்கையால் மீண்டும் சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். நீரின் தன்மை பற்றி ஆய்வு செய்ய ஸ்டெர்லைட் ஆலைக்குள் செல்ல குழுவுக்கு அனுமதி மறுப்பு என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதையும் தலைமைச்செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, மத்திய நிலத்தடி நீர் வாரிய ஆய்வு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்றும், அந்த அறிக்கையை நிராகரிப்பதாகவும் நீர்வளத்துறை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்

முன்னதாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது கடந்த மே மோதம் 22-ஆம் தேதி போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது.

POST COMMENTS VIEW COMMENTS