சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் பலி


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காக்கிவாடான்பட்டி என்ற இடத்தில் ராஜு என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 200-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். 70 அறைகளைக் கொண்ட அந்த ஆலையின் ஒரு பகுதியில் ஃபேன்சி ரக பட்டாசுகள் தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. பொன்னுசாமி, பாண்டி, கிருஷ்ணன், மாரியப்பன் என்ற தொழிலாளர்கள் ரசாயன மூலப் பொருட்களை கலவை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. 

அதில் கிருஷ்ணன், மாரியப்பன் என்பவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த பொன்னுசாமி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். பலத்த தீக்காயமடைந்த பாண்டி என்பவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மாவட்ட சார் ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் விபத்து குறித்து ஆய்வு செய்தனர். பட்டாசு ஆலை உரிமையாளர் ராஜு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS