ஏழு நாட்களுக்குள் ஜெயலலிதா சிகிச்சை காட்சிகள் சமர்ப்பிக்க உத்தரவு


ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதிலிருந்து உயிரிழந்த வரையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து சிசிடிவி பதிவுகளையும் ஏழு நாட்களுக்குள் சமர்ப்பிக்க அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அப்போலோ நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் மற்றும் நமது எம்ஜிஆர் நாளிதழின் பொறுப்பாசிரியர் ஆனந்தன் ஆகியோர் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி கேள்விகளுக்கு பதிலளித்தனர். அப்போது சுப்பையா விஸ்வநாதனிடம் ஆணையம் சார்பில் அடுக்கடுக்கான கேள்விகள் முன்வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

செப்டம்பர் 22ஆம் தேதி பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்படும் நிலையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு, காய்ச்‌சல் நீர்ச்சத்து குறைபாட்டினால் பாதிப்பு என 23ஆம் தேதி அறிக்கை வெளியிடக் காரணம் என்ன எனக் கேள்வி எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு‌ அறிக்கை வெளியிடக் கூறியது யார்? அதற்காக ஒப்புதல் வழங்கியது யார்? எனவும் கேட்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மருத்துவமனைகளில் இருந்த சிசிடிவி பதிவை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது யார் என்பன‌ உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

       

ஆணையத்தில் வாக்குமூலம் அளித்த சுப்பையா விஸ்வநாதன், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து கடைசி வரை வெளியான அனைத்து அறிக்கைகளும் மருத்துவக்குழுவால் தயாரிக்கப்பட்டது எனவும், அதில் கையெப்பம் மட்டுமே தான் இட்டதாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஜெயலலிதாவை அறை மாற்றியபோதும், சோதனைக்கு அழைத்துச் சென்றபோதும் சிசிடிவி கேமிராக்கள் இயக்கப்படவில்லை எனவும், இது தொடர்பாக நிர்வாக அதிகாரியிடம் இருந்து தனக்கு உத்தரவு வந்ததாகவும் அவர் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.‌ இதனையடுத்து சிகிச்சைக்காக ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதிலிருந்து உயிரிழந்தது வரையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து சிசிடிவி காட்சிகளை ஏழு நாட்களுக்குள் சமர்ப்பிக்க அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS